பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக இருக்கும் ஜி.கே.மணி 25 ஆண்டுகளை நிறைவு செய்ததையடுத்து அவருக்கு பாராட்டு விழா வெகு சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்ட நிலையில் அன்புமணி ராமதாஸ் அன்புமணி ராமதாஸ் தலைவராக அறிவிக்கப்பட்டார். இன்று சென்னை திருவேற்காட்டில் நடைபெற உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாசுக்கு மகனாக, 1968ஆம் ஆண்டு அன்புமணி பிறந்தார். சிறுவயது முதலே படிப்பில் சிறந்து விளங்கிய அன்புமணி ,12 ஆம் வகுப்பில் விழுப்புரம், கடலூர் மாவட்டங்களை உள்ளடக்கிய தென் ஆற்காடு மாவட்டத்தில் முதல் மாணவராக தேர்ச்சி பெற்றார். பின்னர் சென்னை மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் மருத்துவ படிப்பை நிறைவு செய்தார். கடந்த 2003ஆம் ஆண்டு லண்டனில் பொருளாதார படிப்பையும் நிறைவு செய்தார்.
படிக்கும் காலத்திலேயே மிகச் சிறந்த விளையாட்டு வீரராகவும் திகழ்ந்த அவர், மாநில அளவிலான பதக்கங்களையும் பெற்றிருக்கிறார். டென்னிஸ், ஹாக்கி, கைப்பந்து, கூடைப்பந்து, மட்டைப்பந்து போன்ற குழு போட்டிகளிலும், இறகு பந்தாட்டம், 100 மீட்டர், 200 மீட்டர் மற்றும் நீச்சல் போன்ற தனிநபர் போட்டிகளிலும் தேர்ச்சி பெற்றவராக விளங்கினார். சென்னை மருத்துவக் கல்லூரியில் படித்த போது விளையாட்டுத்துறை செயலாளராகவும் பதவி வகித்த அவர், பத்து கிலோமீட்டர் அளவிலான மாரத்தான் போட்டிகளிலும் பங்கேற்றிருக்கிறார். விளையாட்டுத்துறையில் தீரா ஆர்வம் கொண்ட அன்புமணி, தற்போது தமிழ்நாடு இறகுப்பந்தாட்ட சங்கத்தின் தலைவராகவும், இந்திய இறகுப்பந்தாட்ட சங்கத்தின் துணைத் தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பாகச் திகழ்ந்து வரும் பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவராக 1997 ஆம் ஆண்டு பொறுப்பேற்றார். அவரது தலைமையில், தமிழகம் முழுவதும் ஆயிரம் ஏரி, குளங்களை தூர்வாரினார். 50 தடுப்பணைகளையும் கட்டினார். இக்காலகட்டத்தில் 25 லட்சம் மரக் கன்றுகளையும் பசுமைத்தாயகம் அமைப்பு சார்பில் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டது. ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் பசுமைத்தாயகம் உறுப்பினராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .
இதனிடையே கடந்த 2004 ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில், 35 ஆவது வயதில் மத்திய குடும்ப நலன் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற அவர் 2009 மார்ச் வரை அப்பொறுப்பில் இருந்தார். இதனிடையே 2006 ஆம் ஆண்டு பாமகவின் இளைஞரணித்தலைவராக நியமிக்கப்படுகிறார் அவர் அமைச்சராக பணியாற்றிய பொழுது உலக அளவில் மிகப்பெரிய பொது சுகாதார திட்டமான தேசிய ஊரக சுகாதார இயக்கத்தினை இந்திய அளவில் தொடங்கினார். இந்த இயக்கத்தின் மூலம் பணியமர்த்தப்பட்ட கிராமப்புற செவிலியர்களுக்கு தான், இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்தியதற்காக சமீபத்தில் உலக சுகாதார அமைப்பு விருது வழங்கியது.
ஜெனிவாவில் 192 நாடுகளின் சுகாதார அமைச்சர்கள் கூடிய சர்வதேச சுகாதார கூட்டமைப்பு மாநாட்டை, தலைமையேற்று நடத்தி இந்திய நாட்டிற்கு பெருமை சேர்த்தார். சர்வதேச அமெரிக்க புற்றுநோய் சங்கம் சார்பில் 2006ஆம் ஆண்டு லூதர் எல் டெர்ரி விருது வழங்கப்பட்டது. புகையிலை எதிர்ப்பிற்காக உலக சுகாதார நிறுவன விருது 2007ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. உலக சுகாதார நிறுவன தலைவரின் சிறந்த தலைமைப் பண்பிற்கான விருது 2007ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. உலக ரோட்டரி சங்கத்தின் போலியோ ஒழிப்பு சாதனையாளர் விருதும் 2007 ஆம் ஆண்டு அவருக்கு கிடைத்தது. இந்திய அளவிலும், இந்தியாவில் போலியோ நோய் முற்றிலும் அழிக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுத்ததற்காக 2014 ஆம் ஆண்டில் அப்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அன்புமணியை பாராட்டி விருது வழங்கினார்
2016 ஆம் ஆண்டு அன்புமணியை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்து, மாற்றம் முன்னேற்றம் அன்புமணி என தேர்தலில் போட்டியிட்டு தமிழகம் முழுவதும் அனைத்து தேர்தலிலும் பாட்டாளி மக்கள் கட்சி தோல்வி அடைந்தது. கடந்த 1997 இல் பசுமைத்தாயகம் அமைப்பின் மூலம் தொடங்கிய அவருடைய அரசியல் பயணம், கட்சியில் அடிப்படை உறுப்பினர், இளைஞரணித்தலைவர் எனத் தொடர்ந்து தற்போது கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். தமிழக அரசியல் வரலாற்றில், கடந்த சில ஆண்டுகளாகவே வாரிசு அரசியல் தொடர்பு ஆகியுள்ள நிலையில், 25 ஆண்டுகளாக பாமகவில் பணியாற்றி வந்த அன்புமணி ராமதாஸ் தற்போது தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் வியூகம் எந்த அளவிற்கு மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்