காஞ்சிபுரம்: உதயநிதி ஸ்டாலின் போட்டியிட திமுகவினர் விருப்பம்! 2026 தேர்தல் களம் சூடுபிடிக்குமா?
Kanchipuram: "காஞ்சிபுரத்தில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட வேண்டுமென, திமுக இளைஞரணி நிர்வாகிகள் விருப்பம் அணு வழங்கியுள்ளனர்."

"காஞ்சிபுரம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட வேண்டுமென திமுகவினர் விருப்பம் மனு அளித்துள்ளனர்."
2026 சட்டமன்றத் தேர்தல்: திமுகவில் விருப்ப மனு விநியோகம் தீவிரம்
தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. பிரதான அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்முரம் காட்டி வரும் நிலையில், ஆளுங்கட்சியான திமுக தனது வேட்பாளர் தேர்வுக்கான முதற்கட்டப் பணியாக விருப்ப மனுப் பெறும் நிகழ்வை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்துத் தொகுதிகளுக்கும் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.
அண்ணா அறிவாலயத்தில் குவிந்த உடன்பிறப்புகள்
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், விருப்ப மனுக்களைப் பெற்று பூர்த்தி செய்து வழங்குவதற்காகத் தனி சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதிகாலை முதலே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரியிலிருந்தும் ஆயிரக்கணக்கான கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அண்ணா அறிவாலயத்தில் குவியத் தொடங்கினர்.
விண்ணப்பக் கட்டணமாக பொதுத் தொகுதிக்கு ரூ. 25,000, மகளிர் மற்றும் தனித்தொகுதிக்கு ரூ. 15,000 நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியிலிருந்து அண்ணா அறிவாலயத்தில் குவிந்த நிர்வாகிகள், தங்கள் விருப்பத் தொகுதிகளுக்கு மனுக்களைப் பெற்று, பூர்த்தி செய்து வழங்கினர். கட்சியின் மூத்த நிர்வாகிகள் முன்னிலையில், தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்துடன் வரிசையில் நின்று விண்ணப்பங்களைச் சமர்ப்பித்து வருகின்றனர். இந்தத் தொகையைச் செலுத்தி ரசீது பெற்ற பின்னரே, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.
காஞ்சிபுரத்தில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட விருப்ப மனு
இந்த விருப்ப மனுத் தாக்கல் நிகழ்வில் ஒரு முக்கிய அம்சமாக, தமிழக துணை முதலமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட வேண்டும் எனப் கட்சியினர் விருப்பம் தெரிவித்துள்ளனர். காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் யுவராஜ், உதயநிதி ஸ்டாலின் பெயரில் விருப்ப மனுவைத் தாக்கல் செய்தார்.
காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் ஆலந்தூர் உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட அந்தந்தப் பகுதி நிர்வாகிகள் ஆர்வம் காட்டி வரும் நிலையில், உதயநிதி ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கை தொண்டர்களிடையே பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மனுத் தாக்கலின் போது இளைஞரணி துணை அமைப்பாளர் அப்துல் மாலிக் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர். தற்போது பெறப்படும் இந்த விருப்ப மனுக்கள் அனைத்தும் பரிசீலனை செய்யப்பட்டு, பின்னர் தொகுதி வாரியாக நேர்காணல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.























