நேற்று மதுரையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் பேசிய அக்கட்சி தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலினை ‘அங்கிள்’ என்று வார்த்தைக்கு வார்தை குறிப்பிட்டு நக்கல் செய்யும் வகையில் பேசினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு மக்கள் நலத் திட்டங்களை அதிகம் செய்ததாக கூறி, முதல்வர் மு.க.ஸ்டாலினை ‘அப்பா’ என குறிப்பிட்டு பலரும் அழைத்து வரும் நிலையில், அதனை கேலி செய்யும் விதமாக விஜய் நேற்று பேசியுள்ளது திமுகவினரை கொந்தளிக்க வைத்துள்ளது.
விஜய் மீது புகார் – நீதிமன்றத்திலும் வழக்கு
தன்னுடைய கட்சித் தலைவரை இழிவுப்படுதும் வகையில் பேசிய விஜயை கண்டித்து அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்டோர் கடுமையான எதிர்வினையாற்றி வரும் நிலையில், மாண்புமிகு என்று அழைக்கப்பட வேண்டிய முதல்வரை ‘அங்கிள்’ என்று கேலி செய்த விஜயை கைது செய்யக் கோரி தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவும், அரசியல் சாசனப்படி முதல்வர் பதவி வகிக்கும் ஸ்டாலினை இழிவுப்படுத்தி பேசியதாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவும் திமுக தரப்பில் முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
பழையை வீடியோவை பகிரும் உபிக்கள்
விஜய் முதல்வரை விமர்சித்து பேசிய நிலையில், அவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் மன்னிப்பு கேட்கும் வீடியோ, முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தினர் பெயர்களை குறிப்பிட்டு இது போன்ற பெயர்களை என் படத் தலைப்பாக வைக்கலாம் என்று யோசித்துள்ளேன் என்று பேசிய காணொளி உள்ளிட்டவைகளை சமூக வலைதளங்களில் திமுகவினர் பகிருந்து விஜய்க்கு அவர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
விஜய் வீடு, அலுவலகம் உள்ள இடங்களில் ஆய்வு செய்ய முடிவு
அதே நேரத்தில், நடிகர் விஜய் வசிக்கும் வீடு, அவரது அலுவலகம் உள்ளிட்ட அவருக்கு சொந்தமான கட்டடங்கள் விதிகளின் அடிப்படையில் கட்டப்பட்டுள்ளதா? ஏதேனும் விதிமீறல் அதில் உள்ளதா என்பதை விரைவில் அதிகாரிகள் ஆய்வு செய்ய திட்டமிட்டு வருவதாகவும், இது விஜய்க்கு சிக்கலை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.