‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் என்ற பெயரை சமூக நீதி என்பதற்குள் மட்டுமே அடக்கிவிடமுடியாது. சமூக நீதி துறை என்று சொல்லிவிட்டால் அதற்குள் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வருவார்கள்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை என்று இருந்த அமைச்சகத்தை வரலாறு தெரியாமல் தவெக அரசு சமூக நீதித்துறை என்று மாற்றியிருப்பதாகவும் இந்த துறைக்கு அமைச்சராக ஆகியிருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு இதனை நியாயப்படுத்தியிருப்பதாகவும் திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி விமர்சித்துள்ளது.
எட்டு பேரை அமைச்சர் ஆக்கியிருப்பது சாதனையா ? முரசொலி கேள்வி
தவெக அமைச்சரவையில் எட்டு பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் அமைச்சர்கள் ஆக்கப்பட்டிருக்கிறார்கள் என்று கூறி தனது தோளில் தானே தட்டிக்கொள்கிறார் முதல்வர் விஜய். இந்த எட்டு பேரும் பட்டியலின சமூகத்திற்கு என்ன செய்திருக்கிறார்கள் என்பதையும் அவர் சொல்ல வேண்டும் என்று கேட்டிருக்கிறது முரசொலி.
காலங்காலமாக இருந்த ‘ஆதிதிராவிடர்’ என்ற அடையாள திட்டமிட்டு நீக்க வேண்டிய அவசியம் ஏன் வந்தது ? நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா, ஆய்வாளர் கவுதம சின்னா போன்றவர்கள் மட்டுமே இதற்கான எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ள அந்த நாளேடு, இந்த மாற்றம் ஆதிதிராவிடர் என்ற பெயரின் நோக்கத்தையே சிதைத்துள்ளதாகவும் முரசொலி தெரிவித்துள்ளது.
சமூக நீதி என்று சொல்லிவிட்டால் என்ன நடக்கும் ?
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் என்ற பெயரை சமூக நீதி என்பதற்குள் மட்டுமே அடக்கிவிடமுடியாது. சமூக நீதி துறை என்று சொல்லிவிட்டால் அதற்குள் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வருவார்கள். இதை கூட புரிந்துகொள்ளாமல், துறையின் பெயர் மாற்றப்பட்டிருக்கிறது என விமர்சித்திருக்கிறது முரசொலி.
வரலாறு என்ன ?
1969ஆம் ஆண்டு முதன்முதலில் முதல்வர் ஆன கலைஞர் தான் ஆதிதிராவிடர் நலத்துறையையும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையையும் தனித்துறையாக உருவாக்கினார். பிற்படுத்தப்பட்டோர் நலனுக்கான சட்ட ஆணையத்தார் அமைத்தார். அந்த பரிந்துரையின்படி இட ஒதுக்கீட்டு முறையை அமல்படுத்தினார். இந்த வரலாறு ஏதும் தெரியாமல், அல்லது இந்த வரலாற்றை மறைக்கும் வகையிலும் திரிக்கும் வகையிலும் ஆதிதிராவிடர் என்ற சொல் நீக்கப்பட்டுள்ளதாக கூறியிருக்கும் முரசொலி, ஆதிதிராவிடர் என்ற சொல்லை நீக்கியது குறித்து சிலர் ஆதரவாக பதிவிட்டிருப்பதால் அனைத்து தரப்பு மக்களின் கருத்தை கேட்ட பின்னரே இதில் ஒரு முடிவெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்






















