தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியின் இன்று தமிழக ஆளுநர் ரவிக்கு எதிராக தலையங்கத்தை வெளியிட்டுள்ளது. அவர்கள் வெளியிட்ட தலையங்கத்தில் எழுதியிருப்பதாவது,


“ பா.ஜ.க.விற்கு தமிழ்நாட்டில் இருக்கும் ஒன்றரையணா ஓட்டுக்கும் உலை வைக்க ஆளுநர் ரவி முடிவெடுத்துவிட்டதாக தெரிகிறது. அவரது நடவடிக்கைகள் அப்படித்தான் இருக்கிறது. தன்னை ஏதோ அவர் ஜனாதிபதியாக நினைத்துக்கொள்கிறார் போலும். தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பிய சட்ட முன்வடிவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டியதுதான் அவரது வேலையே தவிர, ஊறுகாய் பானையில் அவரது வேலை அல்ல.




சரியாகச் சொன்னால் அவருக்கு இருக்கும் கடமையை கூடச் சரியாக செய்யாமல், அவசியமற்ற அரசியல் செய்து கொண்டு இருக்கிறார் ஆளுநர். ஒரு வேளை, தமிழக பா.ஜ.க.வின் தலைமை பொறுப்பைத் தானே கவனிக்கலாம் என்று அவர் நினைத்துவிட்டாரா எனத் தொியவில்லை. யாரோ சிலரால் தமிழக ஆளுநர் தவறாக வழிநடத்தப்படுகிறார் என்பது தெளிவாக தெரிகிறது. நீட் விலக்கு சட்ட முன்வடிவை இரண்டாவது முறை நிறைவேற்றி அனுப்பினால் மறுபடியும் நான் திருப்பி அனுப்ப முடியாது. குடியரசுத் தலைவருக்கு விரைவில் அனுப்பி வைக்கிறேன் என்று தன்னிடம் ஆளுநர் சொன்னதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சொன்னார். இந்த நிலையில், இன்னும் காலதாமதம் செய்து வருகிறார்.


இத்தகைய சூழலிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மிகமிகப் பொறுமையாக செயல்படுகிறார். நேற்று ஆளுநருக்கு அனுப்பிய கடிதம் என்பது மாநில நலனுக்கானதே. நீட் தேர்வு சட்டமுன்வடிவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்காதது தனக்கு மனவேதனை அளிப்பதாக சொல்லி இருந்தார். மாநில மக்களின் நலனை முன்னிறுத்தி, அரசியலமைப்புச் சட்டத்தின்படி இருவரும் தங்கள் கடமைகளை ஆற்றும்போது மாநில மக்களும், மாநில வளமும் பெறும் என்று அறிவுரை சொல்லி இருக்கிறார் முதல்வர். ஆளுநருக்கும், மாநில அரசுக்குமான உறவு தொடர்ந்து இணக்கமாகவும், சுமூகமாகவும் இருக்கும் என்ற நம்பிக்கையையும் தெரிவித்துள்ளார் முதல்வர். அத்தகைய உறவையே தமிழ்நாடு அரசு விரும்புகிறது. ஆனால், ஆளுநரின் போக்கு இதனை விரும்பாததாக அமைந்துள்ளது.




தாமதிக்கபப்டும் நீதி என்பது மறுக்கப்பட்ட நீதி ஆகும். Justice delayed is justice denied என்பது சட்டவியலின் முதல் கோட்பாடு ஆகும். அதனைப் புரிந்தும், தெரிந்தும், தெளிந்தும் ஆளுநராக செயல்பட வேண்டும்.”


இவ்வாறு அந்த தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.  








 



Tags:Goldsilverpricehikefallapril 9th