டெல்லியில் தி.மு.க. எம்.பி. ஆ. ராசா நிருபர்களைச் சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது, “ 2ஜி, 3ஜி, 4ஜி அலைக்கற்றைகளுடன் ஒப்பிடும்போது 5ஜி அலைக்கற்றை ஏலமானது ரூபாய் 5 லட்சம் கோடிக்கு ஏலம் போகும் என்று ஒன்றிய அரசு கூறியது. ஆனால், தற்போது 1 லட்சத்து 50 ஆயிரம் கோடிக்கு மட்டுமே ஏலம் போகியுள்ளது.  மற்ற பணம் எல்லாம் எங்கே..?





5ஜி அலைக்கற்றை ஏலம் முறையாக நடத்தப்படவில்லை. இது திட்டமிட்ட மோசடியா? அல்லது நான்கு, ஐந்து நிறுவனங்களுடன் இணைந்து மத்திய அரசு கூட்டுச்சதி செய்துவிட்டதா? என்று விசாரிக்க வேண்டும். இதில், எங்கு தவறு நடந்துள்ளது என்பதை மத்திய அரசு விளக்க வேண்டும்.” இவ்வாறு அவர் கூறினார்.


5ஜி அலைக்கற்றை ஏலமானது கடந்த மாதம்  26-ந் தேதி நடைபெற்றது. இந்த விவகாரத்தில் ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன் – ஐடியா, அதானி குழுமம் ஆகிய நிறுவனங்கள் பங்கேற்றன. இதில், ஜியோவிற்கும், அதானிக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்ப்பட்டது. இந்த ஏலத்தில் 72 ஆயிரத்து 98 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றையை அரசு ஏலம்விட்டது. இதில், 51 ஆயிரத்து 236 மெகாஹெர்ட்ஸ்  அலைக்கற்றை மட்டும் ஏலம் சென்றது.




மேற்கண்ட அலைக்கற்றைகள் ரூபாய் 1 லட்சத்து 50 ஆயிரத்து 173 கோடிக்க விற்பனையானது. அதிகபட்சமாக அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது 24 ஆயிரத்து 740 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றையை ஏலத்தில் எடுத்தது. அதன் மதிப்பு ரூபாய் 88 ஆயிரத்து 78 கோடி ஆகும். இதற்கு அடுத்தபடியாக  ஏர்டெல் நிறுவனம் ரூபாய் 43 ஆயிரத்து 48 கோடி மதிப்பிற்கு அலைக்கற்றையை ஏலத்தில் எடுத்தது. வோடபோன் – ஐடியா நிறுவனம் ரூபாய் 18 ஆயிரத்து 799 கோடி மதிப்பிற்கு ஏலம் எடுத்தது, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அதானி குழுமம் 212 கோடிக்கு மட்டும் ஏலத்தில் அலைக்கற்றையை ஏலம் எடுத்தது.


காங்கிரஸ் ஆட்சியில் மத்திய அமைச்சராக ஆ.ராசா பொறுப்பு வகித்தபோது 2ஜி அலைக்கற்றையில் மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர், அந்த வழக்கில் அவர் விடுதலை செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண