கள்ளக்குறிச்சியில் பெண் அரசு அதிகாரியை சாதிரீதியாக அவதூறு செய்ததாக, ரிஷிவந்தியம் திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் மீது 4 பிரிவுகளில் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. ஆனால், திடீர் திருப்பமாக, "புகார் கொடுத்த பெண் அதிகாரி வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர். அதை மறைத்து சாதிரீதியாக அவதூறு செய்ததாக எம்எல்ஏவுக்கு எதிராக பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என எம்எல்ஏ தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

Continues below advertisement

 பின்னணி என்ன? 

கள்ளக்குறிச்சி மாவட்ட மகளிர் திட்ட இயக்குநராக பணியாற்றி வந்த லலிதா, கடந்த மாதம் 19ம் தேதி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனராக பணியாற்றினேன். கடந்த அக்டோபர் மாதம் 18-ம் தேதி வசந்தம் கார்த்திகேயன் எம்எல்ஏ என்னை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார் எனக் கூறியுள்ளார். காலை உணவு திட்டத்தில் திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பெண் சமையலர் பணி நியமனம் தொடர்பான விவரத்தைக் குறிப்பிட்டு சாதிரீதியாக தன்னை எம்எல்ஏ இழிவுபடுத்தியதாக தெரிவித்திருந்தார். 

 40 நாட்களுக்கு பிறகு வழக்கு

கடந்த மாதம் அளித்த புகாருக்கு 40 நாட்களுக்கு பிறகு வசந்தம் கார்த்திகேயன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இது பொய் வழக்கு என்றும் திமுக தரப்பில் கூறப்படுகிறது. திட்ட இயக்குநர் லலிதா மீது பல்வேறு முறைகேடு வந்ததால் கடந்த 13ம் தேதி அவரை ராமநாதபுரத்துக்கு இடமாறுதல் செய்தனர். பெரம்பலூரில் அவர் பணி செய்தபோதும் முறைகேடு புகார்களுக்கு ஆளாகியதால் இடமாற்றம் செய்யப்பட்டதாக கூறுகின்றனர். வசந்தம் கார்த்திகேயனுக்கு எதிராக இப்படிப்பட்ட பெண் அதிகாரியை பகடைக்காயாக அரசியல்ரீதியாக பயன்படுத்தியுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். பணியில் சேர விரும்பிய தலித் பெண்ணை, சாதிரீதியாக இழிவுபடுத்தியது லலிதா தான் எனக் கூறுகின்றனர்.

Continues below advertisement

தியாகதுருகம் காவல் நிலையத்தில் புகார்

இதுதொடர்பாக தியாகதுருகம் காவல் நிலையத்தில் லலிதா மீது புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. தன்னை சாதிரீதியாக இழிவுபடுத்தியதாக பாதிக்கப்பட்ட தேவிபாலா என்ற பெண் புகார் மனுவில் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் கவனத்துக்கு கொண்டு வந்ததும் பெண் அதிகாரி லலிதாவை தொடர்பு கொண்டு அரசு அதிகாரியாக இருந்து கொண்டு சாதி பேசுவது தவறு என அறிவுறுத்தியுள்ளார். இந்த சம்பவம் கடந்த மாதம் அக்டோபர் 19ம் தேதியே ஊடகங்களில் பரவலாக வெளியானது. ஆனால், தன்னை சாதிரீதியாக எம்எல்ஏ இழிவுசெய்ததாக பொய்யான புகாரை லலிதா கொடுத்துவிட்டதாக திமுகவினர் கூறுகின்றனர். 

திசை திருப்ப முயற்சி

தங்கள் சாதி பெண்ணை இழிவுபடுத்தியதால் அதே கிராமத்தைச் சேர்ந்த சில பெண்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திட்ட இயக்குநர் லலிதாவிடம் கேட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக தியாகதுருகம் காவல்நிலையத்தில் இரண்டு பெண்கள் லலிதா மீது புகார் மனு அளித்துள்ளனர். அதுவும் எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்துள்ளனர். ஆனால் உண்மைக்கு மாறாக வசந்தம் கார்த்திகேயன் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்பட 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

கள்ளக்குறிச்சி (தனி) சட்டமன்ற தொகுதி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீதான பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை வேகம் எடுத்து வரும் நிலையில் அதை திசை திருப்பும் வகையில் திமுக எம்எல்ஏ மீது பொய் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனை சட்டரீதியாக எதிர்கொள்வோம் ரிஷிவந்தியம் தொகுதி திமுகவினர் கூறி வருகின்றனர்.