"எங்கள் ரூட்டே தனி... மெயின் டார்கெட் தி.மு.க தான்" - கோவையில் சீறிய TVK அருண் ராஜ்...
எத்தனை தடைகள் வந்தாலும் அதனை தவிடு பொடியாக்குவோம் என கோவையில் த.வெ.க மாநிலப் பொதுச் செயலாளர் அருண் ராஜ் பேட்டி.

கோவை, கணியூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் குழு சார்பில் பொதுமக்கள் கருத்து கேட்புக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் செய்தியாளர்ளிடம் பேசிய அவர், மதுரை மற்றும் கடலூரைத் தொடர்ந்து கோவையிலும் மக்கள் சந்திப்பு சிறப்பாக நடந்து முடிந்து உள்ளதாக தெரிவித்தார். மற்ற கட்சிகளை விட தமிழக வெற்றி கழகத்தை ஆழமாக நம்புவதாக தெரிவித்தார்.
தவெக-வின் நேரடி எதிரி தி.மு.க தான்:
வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் கொள்கை அடிப்படையிலானது என்றும், அரசியல் மற்றும் கொள்கை ரீதியாகத் தெளிவாக இருக்கும் தாங்கள் நிச்சயம் திமுகவை வீழ்த்துவோம் என்றும் தெரிவித்தார். தங்களது நேரடி எதிரி தி.மு.க தான் என்று குறிப்பிட்ட அவர், சிறுபான்மையினரை தி.மு.க அரசு கிள்ளுக்கீரையாக நினைப்பதாகவும், கடந்த தேர்தலில் அவர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்றி வருவதாகவும் குற்றம் சாட்டினார். காவல்துறையினர் வெளியிட்டு உள்ள பொது கூட்டங்களுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அருண் ராஜ், முழுக்க, முழுக்க தமிழக வெற்றி கழகத்திற்கு எதிராகவே தொடங்கப்பட்டு உள்ளதாக சாடினார். குறிப்பாக, வேலூரில் மக்கள் சந்திப்பு நடத்த அனுமதி கோரிய அடுத்த நாளே, முதல்வர் வருகையைக் காரணம் காட்டி அனுமதி மறுக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டிய அவர், இந்த விதிமுறைகள் பாரபட்சமாக இருப்பதாகத் தெரிவித்தார்.
குறிவைக்கப்படும் த.வெ.க:
50 ஆயிரம் பேர் கூடும் நிகழ்விற்கு 30 நாட்களுக்கு முன்பே அனுமதி கேட்க வேண்டும் என்பதும், திடலைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் ஏற்பாட்டாளர்களே பொறுப்பேற்க வேண்டும் என்பதும் நடைமுறைக்குச் சாத்தியமில்லாத ஒன்று என்றும், காவல்துறையும் அரசும் தங்கள் மீதான கட்டுப்பாடுகளைத் திணிக்கப் பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும் என்ற விதியே த.வெ.க-வை குறிவைத்துத் தான் சேர்க்கப்பட்டு உள்ளது என்றும், அரசு எத்தகைய முட்டுக்கட்டைகளைப் போட்டாலும் அவற்றை உடைத்துத் தேர்தலைச் சந்திப்போம் என்றும் தவெக மாநில பொதுச் செயலாளர் அருண் ராஜ் தெரிவித்தார்.























