தமிழ்நாட்டில் வரும் 2026ம் ஆண்டு நடக்க உள்ள சட்டமன்ற தேர்தல் மிகவும் சவாலானதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அ.தி.மு.க., பா.ஜ.க., நாம் தமிழர் என இதுவரை எதிர்கொண்டிருந்த தி.மு.க.விற்கு இந்த முறை மிகப்பெரிய தலைவலியாக அமைந்ததிருப்பவர் நடிகர் விஜய்.

நெருங்கும் சட்டமன்ற தேர்தல்:

இந்தாண்டு பிப்ரவரி மாதம் அரசியல் கட்சியைத் தொடங்கிய அவர், தன்னுடைய முதல் அரசியல் மாநாட்டில் தி.மு.க., பா.ஜ.க.வே தங்கள் எதிரி என்று அறிவித்தார். மேலும் தி.மு.க.வின் கூட்டணியை உடைக்க விஜய் பல வியூகங்களையும் வகுத்து வருகிறார். 2025ம் ஆண்டு முதலே தமிழக அரசியல் கூட்டணி கணக்கில் மிகப்பெரிய மாற்றம் வரும் என்றே அரசியல் நிபுணர்கள் கணித்துள்ளனர். 


தி.மு.க.,விற்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்க அ.தி.மு.க.வும் ஒருபுறம் காய் நகர்த்தி வருகிறது. இந்த தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்துள்ள தி.மு.க. அடுத்த சட்டமன்ற தேர்தலிலும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக பல நடவடிக்கைகளை எடுக்க தி.மு.க. அரசு முடிவு செய்துள்ளது. 

மகளிர் உரிமைத் தொகை:


அதற்காக அவர்கள் கையில் எடுத்துள்ள ஆயுதம் மகளிர் உரிமைத் தொகை. மாதந்தோறும் மகளிருக்கு 1000 ரூபாய் என்ற திட்டத்தால் லட்சக்கணக்கான குடும்பங்கள் பயன்பெற்று வருகின்றனர். ஆனாலும், முறையான ஆவணங்கள் இல்லாதது உள்ளிட்ட பல காரணங்களால் பலருக்கும் தகுதி இருந்தும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. மகளிர் உரிமைத் தொகை பெற விண்ணப்பிப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. 


2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மு.க.ஸ்டாலின் அரசு மகளிர் உரிமைத் தொகைக்கு வழங்கப்படும் உதவித்தொகையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. தமிழக அரசைப் பின்பற்றி கர்நாடகம், மகாராஷ்ட்ராவிலும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. 


இந்த நிலையில், அடுத்தாண்டு முதல் மகளிர் உரிமைத் தொகையை அதிகரிப்பதுடன், இதுவரை விண்ணப்பித்து மகளிர் உரிமைத் தொகை கிடைக்காத குடும்பத் தலைவிகளுக்கும் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும் வகையில் நடவடிக்கையை எடுக்க அரசு முடிவு செய்துள்ளது. 

கைகொடுக்குமா வியூகம்?

தி.மு.க. அரசு வகுத்துள்ள இந்த வியூகத்தால் வரும் சட்டமன்ற தேர்தலில், கடந்த சட்டமன்ற தேர்தலைப் போலவே தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்க முடியும் என்று தி.மு.க. நம்புகிறது. மேலும், வரும் சட்டமன்ற தேர்தலில் தொகுதிப் பங்கீட்டில் கூட்டணி கட்சிகளுக்கு பெரியளவில் விட்டுக்கொடுக்க வேண்டிய அவசியமும் இல்லை என்றும் நம்புகிறது. பொங்கலுக்கு பிறகு இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.