ஆளுநருடன் சந்திப்பை நடத்திய தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவினர் மீதான ஊழல் பட்டியல் தொடர்பான ஆவணங்களை ஆளுநரிடம் கொடுத்துள்ளார்.
இந்த சந்திப்பிற்குப் பின்னர் அவர் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ”திமுக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக முதல் குடும்பத்துடன் தொடர்புள்ள பினாமி தகவல்கள் அடங்கிய, திமுக ஃபைல்ஸ் பகுதி 2 ஆவணங்களையும், மேலும், ரூ. 5,600 கோடி மதிப்பிலான 3 ஊழல் குறித்த ஆதாரங்களையும் வழங்கி, இது தொடர்பாக அவர் தலையிட்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளோம்” என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
ஆளுநர் ரவியை சந்தித்த அண்ணாமலை கிட்டதட்ட ஒன்றரை மணிநேரத்திற்கு மேலாக பேசினார். அதன் பின்னர் 16 நிமிடங்களுக்கு மேலான கால அளவு கொண்ட திமுக ஃபைல்ஸ் 2 என்ற வீடியோவை வெளியிட்டுள்ளார். மேலும் அதில், ETL இன்ஃப்ராஸ்ட்ரக்சர் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தில் ரூபாய் 3,000 கோடி ஊழல் செய்யப்பட்டுள்ளது எனவும், போக்குவரத்துத் துறையில் ரூபாய் 2,000 கோடி ஊழல் செய்யப்பட்டுள்ளது எனவும், TNMSCயில் அதாவது தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்தில் ரூபாய் 600 கோடி ஊழல் நடைபெற்றுள்ளது என குறிப்பிட்டுள்ளார். மேலும், இதைப் பற்றி பாதயாத்திரையின் போது பத்திரிக்கை மற்றும் ஊடகங்களில் உள்ள நண்பர்களுக்கு விரிவாகக் கூறுவோம் எனவும் ஊழலில் திளைக்கும் திமுக அரசிடம் பதில் கேட்கிறோம் எனவும் அண்ணாமலை அந்த டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.