TVK Vijay: உள்ளாட்சியை பிடிக்கணும்..! ஆரம்பத்திலேயே வேகமெடுக்கும் ஆளுங்கட்சி - ஒரே கல்லில் இரண்டு மாங்காய்
TVK Vijay: உள்ளாட்சி தேர்தலை இலக்காக கொண்டு திமுக மற்றும் அதிமுகவை சேர்ந்த பலரும், ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவதில் ஆர்வம் காட்டுகின்றனராம்.

TVK Vijay: ஆளுங்கட்சியாக இருந்தாலும் கிராமப்புற அளவில் கட்சியை கொண்டு சேர்க்க, உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவதை மிகவும் முக்கியமானதாக தவெக கருதுகிறதாம்.
உள்ளாட்சி தேர்தலை குறிவைக்கும் தவெக விஜய்..!
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயே எதிர்பார்த்திருப்பாரா? என்று சொல்ல முடியாத நிலையில், ஆளுங்கட்சியாக உருவெடுத்து பலரையும் அதிர்ச்சியிலும், ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளது. இதனையடுத்து அடிமட்ட அளவில் கட்சியை வலுப்படுத்தி, தனிப்பெருங்கட்சி என்ற நிலையை எதிர்வரும் காலங்களில் தனிப்பெரும்பான்மை கட்சியாக மாற்ற வேண்டும் என்பதில் கட்சி தலைமை தீவிரம் காட்டுகிறதாம். இதற்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள, விரைவில் நடத்தப்பட உள்ளதாக கூறப்படும் உள்ளாட்சி தேர்தலை மிகப்பெரிய வாய்ப்பாக பனையூர் தரப்பு கருதுகிறதாம். இந்த தேர்தலில் வெற்றி பெற்றால், அரசின் திட்டங்களை கடைமடை வரை கொண்டு சென்று மக்களின் மனதில் நீங்கா இடம்பெற முடியும் என முதலமைச்சர் விஜய் நம்புகிறராம். இதற்கு வலுசேர்க்கும் விதமாக திமுக மற்றும் அதிமுகவைச் சேர்ந்த பலரும் தவெகவில் இணைய தயாராகி வருகின்றனராம்.
ஆளுங்கட்சிக்கு படையெடுக்கும் திமுக, அதிமுக கோஷ்டிகள்:
காலம் காலமாக ஆண்டு வந்த கட்சிகளை கடந்து, புதியதாக வந்த ஒரு கட்சி ஆட்சி கட்டிலில் ஏன் அமரக்கூடாது? என திமுக மற்றும் அதிமுக அஞ்சியதோ அந்த சூழல் வேகமெடுக்க தொடங்கியுள்ளதாம். இத்தகைய நிலைமை வந்துவிடக்கூடாது என்பதற்காக தான் சாத்தியமில்லாத ஒரு கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையை கூட இரு தரப்புகளும் முன்னெடுத்தனவாம். மூத்த மற்றும் அதிருப்தியில் உள்ள பிரபல தலைவர்கள் தவெக பக்கம் செல்வதை இரண்டு திராவிட கட்சிகளும் விரும்பபில்லையாம். ஆனால் தேர்தல் முடிவுகளை தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் தவெகவிற்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர். உதாரணமாக திமுகவின் மாநில நிர்வாகியான ஈரோட்டைச் சேர்ந்த எல்லபாளையம் ஆர் சிவகுமார், நாமக்கல் கிழக்கு மாவட்ட பொருளாளர் பாலசந்தர், ராசிபுரம் முன்னாள் கவுன்சிலர்கள் ராம்குமார் மற்றும் கேட் தங்கவேல் ஆகியோர் தவெகவில் இணைந்தனர். அதிமுக முன்னாள் அமைச்சர் கே.வி. ராமலிங்கமும் அண்மையில் தவெகவில் இணைந்தார்.
தெற்கு, மேற்கு மாவட்டங்களில் தீவிரம்:
திமுக மற்றும் அதிமுகவினர் தவெகவில் இணையும் நடவடிக்கை இப்போது தான் தொடங்கியுள்ளதாக, ஆளுங்கட்சி தரப்பினர் தெரிவிக்கின்றனர். அடுத்தடுத்த நாட்களில் தெற்கு, மேற்கு மற்றும் மத்திய மாவட்டங்களை சேர்ந்த திராவிட கட்சிகளின் நிர்வாகிகள் பலரும், அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்த, ஆட்சி அமைத்துள்ள தொடங்கி இரண்டு வருடங்களே ஆன தவெகவில் இணைய தயாராகி வருகிறார்களாம். இரு திராவிட கட்சிகளை சேர்ந்தவர்களின் தகவல்களின்படி, ஆளும் கட்சியில் சேர உள்ளூர் மட்டத் தலைவர்களிடையே காணப்படும் அவசரம், விரைவில் நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களுக்கானதாம்.
ஒரே கல்லில் இரண்டு மாங்காய்..!
ஆளும் கட்சி உடனடியாக உள்ளாட்சித் தேர்தல்களை அறிவித்தால், சட்டமன்றத் தேர்தலில் பெற்ற அமோக வெற்றியை தமிழக வெற்றிக் கழகம் மீண்டும் பிரதிபலிக்கும் என்று பல உள்ளூர் நிர்வாகிகள் கருதுகின்றனராம். அதனால் தான் திராவிட கட்சிகளின் பெரும்பாலான தலைவர்கள் ஆளும் கட்சியை நோக்கி நகர தொடங்கியுள்ளனராம். சட்டமன்ற தேர்தலை காட்டிலும் உள்ளாட்சி தேர்தல்கள், மிகவும் தீவிரமானதாக இருக்கும். உள்ளூர் அளவில் ஆதிக்கம் செலுத்தும் நபர்கள் மூலமாகவே வெற்றி வாகை சூட முடியும். அத்தகைய பலம் வாய்ந்த நபர்களை கட்சியில் சேர்ப்பதன் மூலம் தவெகவை வலுப்படுத்துவதோடு, ஆழமான அளவில் மக்கள் பிரதிநிதிகளையும் பெற முடியும் என முதலமைச்சரும், தவெக தலைவருமான விஜய் நம்புகிறாராம். இதனால் எதிர்வரும் தேர்தல்களில் களப்பணியாற்ற வலுவான அமைப்பை உருவாக்க முடியும் என தவெக தரப்பு வலுவாக நம்புகிறதாம்.
Before You Go
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
ட்ரெண்டிங் செய்திகள்






















