Vijayakanth DMDK Meeting: தேமுதிக நிறுவனரான விஜயகாந்த் தலைமையில், நாளை அக்கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.


தேமுதிக பொதுக்குழு கூட்டம்:


தேமுதிக சார்பில் வெளியான அறிக்கையில், “தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் வருகின்ற 14.12.2023 (நாளை) வியாழக்கிழமை காலை 8.45 மணியளவில், சென்னை, திருவேற்காட்டில் உள்ள GPN பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. அதில் தேமுதிக நிறுவனத்தலைவர், பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் கலந்து கொள்கிறார். மேலும் கழக பொருளாளர் திருமதி. பிரேமலதா விஜயகாந்த் கழகத்தின் ஆக்கப் பணிகள் குறித்தும், எதிர்கால திட்டங்கள் குறித்தும் கலந்து ஆலோசித்து சிறப்புரை ஆற்றவுள்ளார்கள்” என குறிப்பிடப்பட்டுள்ளது.


110 நாட்களுக்குப் பின் பொதுவெளியில் விஜயகாந்த்:


கடைசியாக கடந்த ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி அன்று தனது 71வது பிறந்தநாளை ஒட்டி, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்திற்கு வந்து விஜயகாந்த் தொண்டர்களை சந்தித்தார். அதன்பிறகு எந்தவொரு பொதுநிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்காமல் இருந்தார். உடல்நிலை காரணமாக அவர் தொடர்ந்து ஓய்வில் இருந்து வந்தார். இதனிடையே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, 20 நாட்களுக்கும் மேலான தொடர் சிகிச்சைக்குப் பிறகு விஜயகாந்த் அண்மையில் தான் வீடு திரும்பினார். இந்நிலையில், 110 நாட்களுக்குப் பிறகு கட்சியின் முக்கியமான நிகழ்ச்சியில் அவர் நாளை பங்கேற்க உள்ளார்.


பொதுக்கூட்டத்தின் நோக்கம் என்ன?


கூட்டத்தில் கட்சியின் எதிர்கால திட்டங்கள் வகுப்பது, மாவட்டச் செயலாளர் கூட்டங்கள் நடத்துவது, மாநாடு நடத்துவது குறித்து திட்டங்கள் தீட்டுவது, வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் எப்படி செயல்படுவது என்பது குறித்து விவாதிக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதோடு, தேமுதிக பொருளாளராக உள்ள பிரேமலதாவிற்கு கூடுதல் பொறுப்பு வழங்குவது குறித்தும், விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரனுக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்குவது குறித்தும் முடிவு எடுக்கப்படும் என கருதப்படுகிறது.


வீடு திரும்பிய விஜயகாந்த்:


தேமுதிக நிறுவனத் தலைவரும், தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்துக்கு திடீரென சளி, காய்ச்சல், இருமல் காரணமாக சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த மாதம் 18ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாக கடந்த மாதம் இறுதியில் மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருந்தது. இதனால் விஜயகாந்த் எப்படி இருக்கிறார் என தொண்டர்கள் வேதனை அடைந்தனர்.


இதையடுத்து கடந்த சனிக்கிழமை  ஒரு விளக்கத்தை பிரேமலதா வெளியிட்டிருந்தார். அதில்,  விஜயகாந்த் எப்படி இருக்கிறார் என தெரிவித்ததுடன் அவருக்கு தீவிர சிகிச்சை எல்லாம் கொடுக்கப்படவில்லை என தெரிவித்து, அவருடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் அவருக்கு வழக்கமான உடல் பரிசோதனைகளும் சிகிச்சைகளும் முடிந்த நிலையில் அவர் பூரண குணமடைந்து வீடு திரும்பினார் என்று தேமுதிக சார்பில் அறிக்கை வெளியானது.