முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா, சொத்து குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்றதால் பிரிந்து கிடந்த அதிமுக, ஓ.பி.எஸ் மற்றும் இபிஎஸ் தலைமையில் ஒருங்கிணைந்தது. இதை சற்றும் எதிர்பாராத சசிகலாவின் உறவினரான டிடிவி தினகரன், அதிமுக தரப்பில் இருந்து 18 எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவை பெற்று அதிமுகவை தன் வசமாக்க முயற்சித்தார். ஆனால் அவை எதுவும் நடைபெறாத நிலையில் இடைத்தேர்தலில் டிடிவி தினகரனின் 18 எம்.எல்.ஏ.,க்களும் தோல்வி அடைந்தனர்.
 அந்த 18 இடங்களை அதிமுக-திமுக பகிர்ந்து கொண்டது. அடுத்தடுத்து அதிமுகவை கைப்பற்ற டிடிவி தினகரன் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைய, சசிகலாவின் வருகைக்காக காத்திருந்தார் டிடிவி. எதிர்பார்த்ததை போலவே சிறைவாசம் முடிந்து வெளியில் வந்த சசிகலாவிற்கு  அமமுக சார்பில் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.




 
பெங்களூருவில் இருந்து தமிழகம் வரை கூட்ட நெரிசலில் தவழ்ந்து வந்தது சசிகலாவின் கார். அதிமுகவில்  அடுத்தடுத்து அரசியல் மாற்றம் ஏற்படும் என அரசியல் நோக்கர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், அதுமாதிரியான எந்த நிகழ்வும் ஏற்படவில்லை. அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என பலரும் தன்னை சந்திக்க வருவார்கள் என எதிர்பார்த்திருந்த சசிகலாவிற்கு இது பெரிய ஏமாற்றம் தான். ஆனாலும் டிடிவி தினகரன், சசிகலாவை வைத்து அதிமுகவை மீட்கும் நடவடிக்கையை தீவிரமாக துவங்க திட்டமிருந்தார். இந்நிலையில்  கடந்த மார்ச் 3ம் தேதி இரவு சசிகலா வெளியிட்ட அறிக்கை , டிடிவி தினகரன் உள்ளிட்ட சசிகலாவின் ஆதரவாளர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 




‛அதிமுகவினர் அனைவரும் ஒன்றிணைந்து தேர்தலில் பணியாற்ற  வேண்டும். நம்முடைய பொது எதிரி திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் விவேகமாக செயல்பட்டு அம்மாவின் பொற்கால ஆட்சி தமிழகத்தில் தொடர பாடுபடவேண்டும்,’ என்று அதில் குறிப்பிட்டிருந்த சசிகலா, ஜெயலலிதா உயிரோடு இருந்த போது எப்படி அவரது எண்ணத்தை செயல்படுத்தும் சகோதரியாக இருந்தேனோ, அதே போல் அவர் மறைந்த பிறகும் அப்படியே செயல்படுவேன்,’ என தெரிவித்திருந்தார் சசிகலா.




அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்து அம்மாவின் அரசு அமைய ஜெயலலிதாவையும், இறைவனையும் வணக்கிக் கொண்டிருப்பேன்,’ என உருக்கமாக அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார் சசிகலா. 
சசிகலாவின் இந்த முடிவு, அதிமுக தரப்பில் வரவேற்றை பெற்றிருந்தாலும், ‛சசிகலா விலகவில்லை, ஒதுங்கியிருக்கிறார்’ என அவரது அறிக்கையை சுட்டிக்காட்டி அரசியல் விமர்சகர்கள் பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். ‛தேர்தல் முடியும் வரை அமைதி காக்கலாம். அதன் பின் ஏற்படும் எதிர்வினைகளை வைத்து அரசியல் செய்யலாம்,’ என சசிகலா எடுத்த முடிவு தான் அந்த அறிக்கை என பரவலாக பேசப்பட்டது. 
ஆனாலும் அதன் பிறகும் சசிகலா தீவிரமாகவே ஒதுங்கியிருந்தார்.



இந்நிலையில் கடந்த சில நாட்களாக வெளிஉலகில் தடம் பதிக்க துவக்கினார் சகிகலா. கடந்த மார்ச் 16ம் தேதி தஞ்சை வந்த சசிகலா, குலதெய்வ வழிபாடு, ஸ்ரீரங்கம் வழிபாடு, கணவர் நடராஜன் நினைவு தினம் அனுசரிப்பு என பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.


அதுவரை அது அவரது அன்றாட நிகழ்வாகவே இருந்த நிலையில், அமமுக வேட்பாளர்களான ஒரத்தநாடு சேகர், திருவையாறு கார்த்திகேயன், பட்டுக்கோட்டை செல்வம், ஸ்ரீரங்கம் சாருபாலா தொண்டைமான், தஞ்சை தேமுதிக வேட்பாளர் ராமநாதன் ஆகியோர் சசிகலாவை சந்தித்து வாழ்த்து பெற்றது தான் சசிகலா மீதான சந்தேகம்  வலுப்பெற காரணமாகியிருக்கிறது. அத்தோடு நிறைவு பெறவில்லை. அடுத்தடுத்து அமமுக வேட்பாளர்கள் சசிகலாவை சந்தித்து இன்னும் ஆசி பெற்று வருகின்றனர். 




அதிமுகவிற்கு எதிராக களமிறக்கப்பட்டுள்ள அமமுக வேட்பாளர்களை வெற்றி பெற சசிகலா ஆசி வழங்கியது எப்படி? விலகி இருப்பதாக கூறிய சசிகலா, அமமுக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களை சந்திக்க அனுமதியளித்தது ஏன்? அறிக்கையில் அவர் குறிப்பிட்ட அம்மாவின் ஆட்சி என்பது அதிமுக வழியிலா அல்லது அமமுக வழியிலா? என்கிற கேள்வி இப்போது வலுவாக எழுகிறது. 





கோவில் வழிபாடோடு சசிகலா நின்றுவிடவில்லை. வேளாங்கன்னி, நாகூர் தர்ஹா என பிற மத வழிபாடுகளையும் முடித்திருக்கிறார். அதுமட்டுமின்றி போயஸ் கார்டன் சென்று அங்கு பல மணி நேரம் இருந்து வந்துள்ளார். இவை எல்லாம் சசிகலா ஏதோ ஒரு நகர்விற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார் என்பதை தான் காட்டுகிறது. ஒதுங்கவில்லை, தனக்கான செல்வாக்கை பெற ஒருங்கிணைக்கிறார் என்றே தோன்றுகிறது. தேர்தல் முடியும் போது, தனது திட்டத்தை செயல்படுத்த அது சரியாக இருக்கும் என தீர்க்கமாக நம்புகிறார் சசிகலா. 





‛ஒருவேளை அதிமுக தோல்வியடைந்தால், தனது தலைமை ஏற்காமல் போனது தான் அதற்கு காரணம் என கூறலாம். ஒருவேளை வெற்றியடைந்தால், தான் பெருந்தன்மையாக ஒதுங்கி ஒருங்கிணைந்து பணியாற்ற கூறியது தான் காரணம்,’ என கூறலாம் என்கிற திட்டத்தில் சசிகலா இருக்கிறார் என்கின்றனர் அவருக்கு நெருக்கமானவர்கள். எந்த கட்சிக்கு பணியாற்ற வேண்டும் என்கிற வார்த்தையை அவரது அறிக்கையில் குறிப்பிடாமல் தவிர்த்ததில் இருக்கும் சூட்சமம் தான் , சசிகலாவின் செயலிலும் இருக்கிறது. அதன் பின்னணியிலும் டிடிவி தினகரன் இருக்கலாம்  என்கிற சந்தேகமும் இல்லாமல் இல்லை. 




எது எப்படி இருந்தாலும் தற்போது ஓபிஎஸ்-இபிஎஸ் தலைமையிலான அதிமுக, சசிகலாவை ஏற்கவில்லை என்பது உண்மை. டிடிவி ஏற்கிறார். எனவே அவர் பக்கம் சாய்வதை சசிகலா தவிர்க்க முடியாது. ஒருவேளை சசிகலாவிற்கு அரசியல் ஆசை இருந்தால் இதுமட்டும் தான் வழி.  இப்போது சசிகலா நகர்த்தி வரும் காய், எந்த இலக்கை நோக்கியது என்பது மே 3ல் தெரிந்துவிடும்.