காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரும், சேலம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான தேவதாஸ் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.



இதுகுறித்த செய்தியாளர்களை சந்தித்தார் தேவதாஸ், ”ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக கட்சியில் இருந்து வரும் தனக்கு காங்கிரஸ் கட்சி எந்தவித அங்கீகாரமும் கொடுக்கவில்லை. எனவே காங்கிரஸ் கட்சியின் செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகுவதாக அறிவித்தார். காங்கிரஸ் கட்சியில் மாநிலத் தலைமை காமராஜர், மூப்பனார் போல் யாரும் செயல்படாததால் அவர்கள் விட்டுச் சென்ற இடம் வெற்றிடமாகவே உள்ளது என்று காங்கிரஸ் கட்சியின் தலைமையில் விமர்சித்தார். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு இன்றளவும் கிராமங்களில் பெரும் செல்வாக்கு இருந்து வருகிறது. இருப்பினும் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக வருபவர்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்ளாததால் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்கள் குறைந்து கொண்டே வருகின்றனர். பலமுறை இதைப் பற்றி கூறியும் எந்தவித நடவடிக்கைகளையும் மத்திய காங்கிரஸ் கமிட்டியும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியும் எடுக்கவில்லை” என்று கூறினார்.



காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவர்களில் ஒருவரான எனது தந்தை ராமசாமி உடையார், அவர்களுக்கும் சட்டமன்ற உறுப்பினர் பதவியைத் தவிர எந்த அங்கீகாரமும் கிடைக்கவில்லை. தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் ஒதுக்கப்படுவது தற்போது அதிகமாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து படித்த உள்ளாட்சித் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சியிலிருந்து போட்டியிட்டவர்கள் முகம் தெரியாத நபர்கள் ஆகவே இருந்துள்ளார். மேலும், காங்கிரஸ் கட்சியில் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து செயல்படாமல், தனித்தனியாக குழுக்களை உருவாக்கிய அவர்களுக்காக மட்டுமே செயல்பட்டு வருகின்றனர். இதைப்பற்றி சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு பலமுறை கடிதம் எழுதியும் எந்தவித பதிலும் தலைமையிலிருந்து வரவில்லை என்று கூறினார்.


திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் நின்று தேர்தலில் போட்டியிடுவதை விட, காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட வேண்டும். அப்போதுதான் காங்கிரஸ் கட்சியின் பலம் மக்களுக்கும், பிற கட்சியினருக்கும் தெரியவரும் என்று கூறினார். காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகும் எனக்கு பிற கட்சிகளில் இணைவதற்கு விருப்பமில்லை. தற்போது வரை தனக்கு எந்தவித அரசியல் கட்சியில் இருந்தும் அழைப்பு வரவில்லை. எனது தனிப்பட்ட முடிவாகத் தான் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுகிறேன். இதற்கான கடிதத்தை சோனியா காந்திக்கும், தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கும் அனுப்பியுள்ளதாக கூறினார். காங்கிரஸ் கட்சியில் தலைமை சரியாக இல்லாததால் தான் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் காங்கிரஸ் கட்சி கூட்டணி இல்லாமல் தனித்து நின்று வெற்றி பெறும் என்றார். தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினரும், சேலம் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் முக்கிய நபர்களில் ஒருவரான தேவதாஸ் கட்சியிலிருந்து விலகியுள்ளது காங்கிரஸ் கட்சியினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.