Udhayanithi: சும்மா தட்டுனா போதும்.. பேஸ்மேண்டே இல்லாமல் அரசியலுக்கு வர முயற்சிக்குறாங்க - உதயநிதி பேச்சு
அரசியலில் சிலர் அஸ்திவாரமே இல்லாமல் உள்ளே வரப் பார்க்கிறார்கள் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.

திமுக 75 அறிவுத் திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அதில் அவர் பேசியதாவது,
பேஸ்மேண்ட் இல்லாமல்:
இன்று அரசியலில் சிலர் பேஸ்மேண்டே இல்லாமல் உள்ளே வர முயற்சிக்கின்றனர். கண்காட்சி பார்த்திருப்பீர்கள். அங்கே சென்று பார்த்தீர்கள் என்றால் திடீர்னு ஒரு தாஜ்மஹால் மாதிரியே ஒரு செட் போட்ருப்பாங்க. ஈபிள் கோபுரம் மாதிரி செட் போட்டிருப்பாங்க. உடனே பெரிய கூட்டம் கூடும்.
நம்ம ஊருக்கு தாஜ்மஹால் வந்துருச்சுப்பா. நம்ம போயி ஒரு செல்ஃபி எடுத்துக்குவோம்பா. அப்படினு இளைஞர்கள் சென்று நிச்சயம் போட்டோ எடுக்கத்தான் செய்வார்கள். அவ்ளோ ஆர்வம். தாஜ்மஹாலை போட்டோலயே பாத்துருக்கோம். இப்போ நமது ஊருக்கே வந்துடுச்சேப்பா. ஈபிள் கோபுரத்தைப் பார்க்க வேண்டும் என்றால் பாரீஸ் போக வேண்டும். நமது ஊருக்கே வந்துடுச்சுப்பா ஈபிள் கோபுரம்.
தட்டுனா போதும்:
இது தெரியாம பெரிய கூட்டம் கூடத்தான் செய்யும். அது எல்லாம் வெறும் அட்டை. அதில் எந்தவித அஸ்திவாரமோ, கொள்கையோ கிடையாது. சும்மா தட்டுனா போதும். ஒரு சின்ன காத்தடிச்சா போதும். அவர்களுக்கு எல்லாம் சொல்லிக் கொள்வது திமுக தியாகத்தாலும், போராட்டத்தாலும் உருவான இயக்கம்.
அதிமுக:
எமர்ஜென்சியை பார்த்த கழகம் திமுக. எமர்ஜென்சியை பார்த்தவர் எங்கள் தலைவர். எமர்ஜென்சி காலத்தில் இன்னொரு விஷயம் நடந்தது ஒன்றிய அரசு மாநில கட்சிகளை எல்லாம் தடை செய்ய வேண்டும் என்று முடிவு எடுத்தனர். உடனே அதிமுக என்ன செய்தார்கள் தெரியுமா? கட்சி பெயரை மாத்திட்டாங்க. உத்தரபிரதேசத்திலும், ராஜஸ்தானிலும் இவர்களுக்கு கிளை இருப்பது போல அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்னு மாத்திட்டாங்க. இதுதான் திமுக-விற்கும், அதிமுக-விற்கும் உள்ள வித்தியாசம்.
ஆனால், கலைஞர் ( கருணாநிதி) வாழ்ந்தாலும் கழகத்தோடுதான் வாழ்வேன். வீழ்ந்தாலும் கழகத்தோடுதான் வீழ்வேன். எங்கள் இயக்கத்தோடு பெயர் என்றைக்கும் திராவிட முன்னேற்ற கழகம்தான். என்ன நடந்தாலும் பாத்துக்கலாம் என்ற உறுதியோடு நின்றவர். இன்றும் அதே வேகத்தோடு நமது தலைவர் இருக்கிறார். இன்னும் சொல்ல வேண்டுமென்றால் நம்மை கொள்கை வழிநடத்துகிறது. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை பயம் வழிநடத்துகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
வரும் சட்டமன்ற தேர்தலில் ஆளுங்கட்சியான திமுக-விற்கு கடும் போட்டியாக அதிமுக மட்டுமின்றி தவெக-வும் உருவெடுத்துள்ளது. திமுக-விற்கு எதிராக அவர்கள் தொடர் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.




















