தமிழ்நாட்டின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடர்ச்சியாக பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக இன்று மாலை சேலம் வருகை தர உள்ளார்.
இது தொடர்பாக தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சரும், மத்திய மாவட்ட திமுக செயலாளருமான ராஜேந்திரன் சேலத்தில் செய்தியாளர்களை சந்திப்பார். இப்போது அவர் கூறியது, "தமிழ்நாடு துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக சேலத்திற்கு இன்று (19ம் தேதி) வருகிறார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு, மாலை 4 மணிக்கு சேலம் மாவட்டம் வருகிறார். சேலம் மாவட்ட எல்லையான தலைவாசல் சுங்கச்சாவடி அருகில் துணை முதல்வருக்கு திமுக சேலம் மத்திய மாவட்டம், மேற்கு மாவட்டம், கிழக்கு, மாவட்ட திமுக சார்பில் பிரமாண்டமான வரவேற்பு வழங்கப்படுகிறது.
சேலத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்:
பின்னர் அவர் இரவு சேலத்தில் தங்குகிறார். நாளை காலை டவுன் நேரு கலையரங்கில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சேலம், நாமக்கல் மாவட்ட ஊராட்சிகளுக்கு 2200 விளையாட்டு உபகரணங்களையும், நலத்திட்ட உதவிகளையும் வழங்கி பேசுகிறார். இதைத்தொடர்ந்து பகல் 3.30 மணிக்கு கருப்பூர் தீர்த்தமலைகவுண்டர் திருமண மண்டபத்தில் திமுக மாநில இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்குகிறார். இவ்வாறு அவர் கூறினார்.
இபிஎஸ் மாவட்டத்தில் உதயநிதி:
திமுக இரண்டாவது இளைஞரணி மாநாடு சேலத்தில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து சேலத்தில் மீண்டும் திமுக மாநில இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதை அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது. அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில் தொடர்ச்சியாக உதயநிதி ஸ்டாலின் இளைஞர் அணி கூட்டங்களை நடத்தி வருகிறார். இதற்கு மறைமுக காரணங்கள் ஏதேனும் உள்ளதா என திமுகவினரிடம் விசாரித்தபோது தமிழ்நாட்டு துணை முதல்வரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் அரசு மற்றும் திமுக நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டத்திற்கு நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வருகை தர உள்ளார். இதன் காரணமாக மட்டுமே சேலம் தேர்வு செய்யப்பட்டது. மேலும், பல்வேறு மாவட்டத்தில் இருக்கக்கூடிய நிர்வாகிகள் வந்து செல்வதற்கு சேலம் எதுவாக இருப்பதால் சேலத்தை தேர்வு செய்ததாக கூறப்படுகிறது.
அமைச்சர் ராஜேந்திரன் ஆய்வு:
இதைத்தொடர்ந்து, அமைச்சர் ராஜேந்திரன், சேலம் மாநகரில் உள்ள நேரு கலையரங்கில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்தார். விழாவிற்கான இருக்கைகள், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். கலையரங்க பகுதிக்குதார் சாலை மற்றும் பெயிண்ட் அடிக்கும் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது, மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி, சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், மாநகராட்சி கமிஷனர் ரஞ்சித் சிங், மாநகர காவல் ஆணையர் பிரவின் குமார் அபினபு, துணை கமிஷனர் வேல்முருகன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.