பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் கைது செய்ததை கண்டித்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் பாரதிய ஜனதா கட்சியினர் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பாரதிய ஜனதா கட்சியின் ஓபிசி அணி மாநில தலைவர் சாய் சுரேஷ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 300க்கும் மேற்பட்ட பாஜகவினர் கலந்து கொண்டு காவல்துறையினர் மற்றும் திமுக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.


தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் உள்ள பாரதமாத கோயிலுக்கு கடந்த மாதம் 11 ஆம் தேதி தமிழக பாஜக துணைத் தலைவர் சென்ற போது, கோயில் பூட்டிய நிலையில் இருந்துள்ளது. அதன் பின்னர் பூட்டை உடைத்து கோயிலுக்குள் சென்று பாரதமாதா சிலைக்கு மாலை அணிவித்துள்ளனர். ஆனால் இவர்கள் பூட்டை உடைக்கும் முன்னரே காவல் துறையினரும் கோயில் நிர்வாக அதிகாரிகளும் வெளியில் நின்று வழிபாடு செய்துவிட்டு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.



இதனை கேட்காமல், கோயில் பூட்டை உடைத்த பாஜக மாநில துணைத் தலைவர் உறுப்பினருமான கே.பி.ராமலிங்கம் உட்பட 50 பேர் மீது பாப்பாரப்பட்டி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர். கடந்த 14 ஆம் தேதி இரவு 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், சட்டத்தினை மீறும் செயலைச் செய்ததற்காகவும், அதனை முன்னின்று செய்ததற்காகவும் தமிழக பாஜக துணைத் தலைவர் கே.பி. ராமலிங்கம் கைது செய்யப்பட்ட நிலையில் அங்கிருந்து மருத்துவ பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவருக்கு ரத்த கொதிப்பு, நெஞ்சுவலி உள்ளிட்ட உடல் பிரச்சினைகள் இருப்பதாக ராமலிங்கம் போலீசாரிடம் தெரிவித்தார். அதன்பின் பாப்பாரப்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், உயர் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


இதனையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு மாற்றப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டதை அறிந்த பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்கள் ஏராளமானோர் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் குவிந்தனர். ஆம்புலன்ஸில் இருந்து மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் அலைத்து வரப்பட்டபோது அவரை பார்க்க பாஜக தொண்டர்கள் முற்பட்டனர்.



இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மருத்துவமனைக்கு உள்ளே அனுமதிக்க கோரி பாஜக தொண்டர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் காவல்துறையினருக்கும் பாஜகவினருக்கும் கடும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து மருத்துவ பரிசோதனைக்கு பிறகு கே.பி.ராமலிங்கம் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். சேலம் மாநகர காவல் துணை ஆணையர் லாவண்யா தலைமையில் காவலர்கள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


இதனையடுத்து சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாஜக துணை தலைவர் கே.பி. ராமலிங்கத்தை பென்னாகரம் கிளை நீதிமன்ற நீதிபதி விசாரணை நடத்தினார். விசாரணை முடிவில், கே.பி.ராமலிங்கத்தை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். தற்போது காவல்துறையினரின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வரும் அவர் சிகிச்சைக்கு பின்னர் சிறையில் அடைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.







ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண