காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியை அமலாக்கத்துறை விசாரித்ததை எதிர்த்து டெல்லியில் போராடிய மகிளா காங்கிரஸ் அமைப்பின் தலைவர் நேட்டா டிசூசா காவல்துறையினர் மீது எச்சில் துப்பும் வீடியோ வைரலாகி வருகிறது.


காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை அமலாக்கத்துறை சமீபத்தில் நேஷனல் ஹெரால்ட் வழக்கு தொடர்பாக விசாரித்தது. இதனைக் கண்டித்து டெல்லியில் மகிளா காங்கிரஸ் நடத்திய போராட்டத்தின் போது, போராட்டக்காரர்களைக் காவல்துறை கைது செய்தது. காவல்துறையினரின் வாகனத்தில் அனைவரையும் ஏற்றி, கதவை மூடும் போது எச்சில் துப்பிய வீடியோவைப் பகிர்ந்த பாஜக செய்தித் தொடர்பாளர் ஷேசாத் பூனாவால்லா காங்கிரஸ் கட்சியை விமர்சித்துள்ளார்.


`அசாமில் காவல்துறையினரை அடித்தது, ஹைதராபாத்தில் காவல்துறையினரின் காலரைப் பிடித்தது, தற்போது மகிளா காங்கிரஸ் தலைவர் காவலர்கள் மீது எச்சில் துப்புகிறார்.. இது அவமானகரமாகவும், அருவெறுப்பாகவும் இருக்கிறது.. ஊழக் வழக்கில் ராகுல் காந்தியைக் கேள்வி எழுப்பியதற்காக இவையெல்லாம்.. இவர் மீது சோனியா, பிரியங்கா, ராகுல் ஆகியோர் நடவடிக்கை எடுப்பார்களா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார் பாஜக செய்தித் தொடர்பாளர் ஷேசாத் பூனாவால்லா. 







நேஷனல் ஹெரால்ட் பண மோசடி வழக்கில் தொடர்ந்து ஐந்தாவது நாளாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், அமலாக்கத்துறையைத் தவறாக பயன்படுத்துவதாகக் கூறி காங்கிரஸ் கட்சியினர் தலைமை அலுவலகத்தில் சத்தியாகிரகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். 



ராஜஸ்தான் முதல்வர் அஷோக் கெஹ்லாட், சத்திஸ்கர் முதல்வர் பூபேஷ் பகேல் ஆகியோர் டெல்லி ஜந்தர் மந்தர் வரை பேரணி நடப்பதாக அறிவித்திருந்த நிலையில், காவல்துறையினர் அவர்களைத் தடுத்துள்ளனர். மேலும், காங்கிரஸ் தொண்டர்கள் பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து, காங்கிரஸ் தலைவர்களுக்கு ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதி வழங்கியதாகவும், பேரணி செல்ல அனுமதி வழங்கப்படவில்லை எனவும் டெல்லி காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. 


இதுகுறித்து பேசிய ராஜஸ்தான் முதல்வர் அஷோக் கெஹ்லாட் பாஜக தலைவர்களைப் பாசிஸ்ட்கள் எனக் கூறியுள்ளார். `இந்த பாசிஸ்ட்கள் ஜனநாயகத்தின் முகமூடியை அணிந்திருக்கிறார்கள்.. ஒரு சமூகத்திற்கு எதிராக மற்றொன்றைத் தூண்டிவிட்டு, சமூக கட்டமைப்பை சிதைக்கிறார்கள்’ எனக் கூறியுள்ள அஷோக் கெஹ்லாட் காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டத்தைத் தொடர வேண்டும் எனக் கூறியுள்ளார்.