டெல்லியில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. டெல்லியில் மீண்டும் ஆட்சியை ஆம் ஆத்மி பிடிக்குமா? மத்தியில் ஆட்சியில் உள்ள பா.ஜ.க.விற்கு சவால் தந்து வந்த டெல்லி ஆம் ஆத்மி வசம் வருமா? என்ற பரபரப்பான சூழலில் இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. 

Continues below advertisement

டெல்லியில் பா.ஜ.க. ஆட்சி:

வாக்கு எண்ணிக்கைத் தொடங்கியது முதலே பா.ஜ.க. தங்களது ஆதிக்கத்தைத் தொடங்கியது. தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வந்த பா.ஜ.க. டெல்லியில் 26 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியை கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்த பர்வேஷ் சர்மா காணப்படுகிறார். 

Continues below advertisement

டெல்லியின் முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக நேரடியாக போட்டியிட்டு அவரை வீழ்த்தியவர் பர்வேஷ் வர்மா. இவர் 4 ஆயிரத்து 89 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளார். அரவிந்த் கெஜ்ரிவாலையே வீழ்த்திய பர்வேஷ் வர்மாவிற்கு டெல்லியின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. 

சொத்து மதிப்பு என்ன?

டெல்லி முன்னாள் முதலமைச்சர் சகீப்சிங் வர்மாவின் மகன் பர்வேஷ் வர்மா. டெல்லி கிரோரி மால் கல்லூரியில் பட்டம் பெற்ற பர்வேஷ் தாக்கல் செய்துள்ள சொத்து மதிப்பில் தனக்கு ரூபாய் 89 கோடி சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார். அவரது மனைவி சுவாதி சிங் பெயரில் ரூபாய் 24.4 கோடி சொத்து இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளார். மொத்தமாக பர்வேஷ் வர்மாவின் சொத்து மதிப்பு ரூபாய் 113 கோடி ஆகும். 

அவர் தாக்கல் செய்துள்ள சொத்து மதிப்பில் ரொக்கமாக ரூபாய் 2.2 லட்சம் இருப்பதாகவும், 52.75 கோடி மதிப்பில் பங்குச்சந்தை உள்ளிட்ட பலவற்றில் முதலீடு செய்திருப்பதாகவும், 17 லட்சம் ரூபாய் வரையில் காப்பீட்டில் முதலீடு செய்திருப்பதாகவும் தகவல் தெரிவித்துள்ளார். மேலும், சுவாதி சிங் சார்பாக 5.5 லட்சம் ரூபாய் மதிப்பில் காப்பீடு செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

பர்வேஷ் வர்மா கார்:

பர்வேஷ் வர்மா தன்னிடம் டொயோட்டா பார்ச்சுனர், டொயோட்டா இன்னோவா மற்றும் மகேந்திர எக்ஸ்யூவி கார்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், அவரிடம் 200 கிராம் தங்கம் இருப்பதாகவும், அதன் மதிப்பு ரூபாய் 8.25 லட்சம் என்றும் தனது வேட்புமனுவுடன் தாக்கல் செய்துள்ள சொத்து மதிப்பில் தெரிவித்துள்ளார். 

டெல்லி தேர்தல் அனைவராலும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வந்த நிலையில், இந்த தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றிருப்பதை நாடு முழுவதும் உள்ள பா.ஜ.க.வினர் கொண்டாடி வருகின்றனர். மேலும், சிறையில் இருந்து வெளியில் வந்த பிறகு வெற்றி பெற்று முதலமைச்சராக திரும்புவேன் என்று கூறிய அரவிந்த் கெஜ்ரிவாலை தோற்கடித்ததன் மூலம் ஆம் ஆத்மிக்கு பெரும் பின்னடைவை பர்வேஷ் வர்மா ஏற்படுத்தியுள்ளார்.