இந்தியாவில் பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுப்பது வழக்கம். கடைசியாக 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அடுத்ததாக 2021ஆம் ஆண்டு எடுக்க வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பு கொரோனா பேரிடர் காலத்தினால் எடுக்கப்படாமல் போனது. இந்நிலையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு வரும் 2027ஆம் ஆண்டு எடுக்கப்பட உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதேபோன்று எதிர்க்கட்சிகளின் நீண்ட நாள் கோரிக்கையான சாதிவாரி கணக்கெடுப்பும் மக்கள் தொகை கணக்கெடுப்போடு நடத்தப்பட உள்ளது. 

Continues below advertisement

எதிர்க்கட்சிகள் விமர்சனம்

கொராேனா காலத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த முடியாத சூழலை அனைவரும் அறிவோம். அதே சமயத்தில் 2024 மே மாதத்தில் மக்களவை தேர்தல் நடைபெற்றது. தேர்தல் நடந்து முடிந்த பின்னர் கணக்கெடுப்பை நடத்தி முடித்திருக்கலாம். மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு பிறகு தொகுதி மறுவரை செய்ய வேண்டிய சூழல் ஏற்படும். அவ்வாறு நடைபெற்றால் தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் எம்.பி. தொகுதிகளை இழக்கும் என முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் தொகுதி மறுவரையை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இவரைத்தொடர்ந்து திமுக எம்பிக்களும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 

Continues below advertisement

தயாநிதி எம்.பி. விமர்சனம்

 தொகுதி மறுவரையரை குறித்து எம்.பி. தயாநிதி மாறன் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது, "அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் 84-இன் படி 2026க்கு பின் மேற்கொள்ளப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி தொகுதி மறுவரை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இதை மனதில் வைத்தே மக்கள் தொகை கணக்கெடுப்பைக் காலம் தாழ்த்தி வந்து தற்போது 2027-ல் மேற்கொள்ளப்படும் என பாஜக அரசு அறிவித்துள்ளது. பாஜக அரசு செய்யும் இந்த சதியை ஆரம்பம் முதலே தமிழக முதல்வர் ஸ்டாலின் எதிர்த்து வருகிறார். இதற்கு தமிழக அரசு வீண் பதற்றத்தை ஏற்படுத்துவதாக பாஜக தெரிவித்தது. 

அமித் ஷா உறுதி அளிப்பாரா?

தற்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா என்ன சொல்ல இருக்கிறார். தமிழ்நாட்டின் எம்.பி. தொகுதிகளின் எண்ணிக்கை குறையாது என்ற ஏமாற்று வார்த்தைகள் எங்களுக்கு வேண்டாம். மக்களவையில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவ விகிதம் 7.18 சதவீதத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்ற உத்தரவாதத்தை சட்டப்படி அளிக்க உள்துறை அமைச்சர் அமித்ஷா தயாரா?" என கேள்வி எழுப்பியுள்ளார். 

இபிஎஸ் கண்டனம்

தொகுதி மறுவரையறை குறித்து ஸ்டாலின் அரசியல் செய்வதாக இபிஎஸ் கண்டனம் தெரிவித்திருந்தார். இதில், புலி வருது, புலி வருது என்று கூறி பூச்சாண்டி காட்டும் வேலையைத்தான் ஸ்டாலின் செய்து வருகிறார். தனது ஆட்சியில் நடக்கும் அவலங்களை மறைக்கும் விதமாக மடைமாற்றும் அரசியலை மக்கள் நம்ப மாட்டார்கள் என்றும் தெரிவித்திருந்தார். மேலும், இபிஎஸ்-யின் கருத்திற்கு முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் செய்தார். இதில், முன்னதாகவே தொகுதி மறுவரையறை குறித்து எச்சரித்திருந்தேன். அது இப்போது நிரூபணமாகிவிட்டது. பாஜகவுடன் கூட்டு சேர்ந்திருப்பதன் மூலம் எடப்பாடி பழனிசாமி இந்த சதிக்கு கூட்டு சேர்ந்து துரோகம் இழைத்து வருவதாக முதல்வர் சாடி பேசியது குறிப்பிடத்தக்கது.