Dairy Milk AD: இந்திலா ஒரு பிரச்னையா? மும்மொழி கொள்கை சர்ச்சை, வட இந்தியாவில் தமிழ் பெண் - மாஸ் சம்பவம்
Dairy Milk AD: இந்தி திணிப்பு குற்றச்சாட்டுக்கு மத்தியில் பிரபல சாக்லெட் நிறுவனத்தின் விளம்பரம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Dairy Milk AD: இந்தி திணிப்பு குற்றச்சாட்டுக்கு மத்தியில் பிரபல சாக்லெட் நிறுவனத்தின் விளம்பரம், ஆங்கிலம் எப்படி மக்களை இணைக்கிறது என்பதை விளக்குகிறது.
வைரலாகும் வீடியோ:
டெய்ரி மில்க் சாக்லெட் நிறுவனம் வெளியிட்டுள்ள விளம்பர வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. மும்மொழிக்கொள்கை மற்றும் இந்தி திணிப்பு போன்ற மொழி பிரச்னைகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ள அந்த விளம்பரம் பொதுமக்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் அந்த வீடியோ சமுக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. மக்கள் ஒற்றுமையாக இருக்க மொழி ஒரு பிரச்னை இல்லை என்பதை அந்த வீடியோ விளக்குகிறது.
வீடியோவில் இருப்பது என்ன?
வைரலாகும் வீடியோவில், “வட இந்தியாவில் புதியதாக குடியேறியுள்ள சென்னையை சேர்ந்த ஒரு பெண், அதே பகுதியில் வசிக்கும் பெண்களை முதல்முறையாக சந்திக்கிறார். அப்போது அவர்கள் நலம் விசாரிக்க, தனக்கு அவ்வளவாக இந்தி தெரியாது என அரைகுறை இந்தியில் பதிலளிக்கிறார். அதுபரவாயில்லை என கூறிவிட்டு கூட்டத்தில் உள்ள ஒரு பெண், தானும் தனது கணவரும் வெளியூர் சுற்றுலா சென்றபோது நடந்ததை பகிர தொடங்குகிறார். அவர் இந்தியில் பேச, அதை புரிந்துகொள்ள முடியாமல் தமிழ் பெண் சிரமப்படுகிறார். இதனை உணர்ந்த அந்த பெண் தனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் குறிப்பிட்ட சம்பவத்தை விளக்க, அங்கிருப்பபர்கள் அதை கேட்டு மகிழ்கின்றனர். அதைதொடர்ந்து அங்கிருந்த ஒவ்வொரு பெண்ணும் தங்களுக்கு தெரிந்த ஆங்கிலத்தில் உரையாட தொடங்க மகிழ்ச்சியுடன்” அந்த வீடியோ நிறைவடைகிறது.
வீடியோ உணர்த்துவது என்ன?
அந்த வீடியோவில் சென்னையை சேர்ந்த பெண் தனக்கு இந்தி தெரியாது என்பதை அரைகுறை இந்தியிலேயே சொன்னாலும், வட இந்திய பெண்கள் உணர்ந்துகொள்கின்றனர். தொடர்ந்து தமிழ்பெண் இந்தி தெரியாமல் முழித்தபோது, வடஇந்திய பெண் தாமாகவே முன்வந்து தனக்கு தெரிந்த அரைகுறை ஆங்கிலத்தில் பேச தொடங்குகிறார்.
தன்னிடம் தமிழில் பேசுங்கள் என அந்த சென்னை பெண்ணோ அல்லது நீ எங்களிடம் இந்தியில் தான் பேச வேண்டும் என்று அந்த கூட்டத்தில் இருந்தவர்களோ வற்புறுத்தவில்லை. அதேநேரம், சென்னை பெண்ணுக்கு இந்தி தெரியவில்லை என்பதை முகபாவனையிலேயே உணர்ந்த பெண், நேரடியாகவே தனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் உரையாட தொடங்குகிறார். காரணம் அந்த தமிழ் பெண்ணுக்கு இந்தி தெரியாவிட்டாலும், ஆங்கிலம் தெரிந்திருக்கும் என்ற எண்ணம் மனதளவில் அந்த பெண் (அதாவது வட இந்தியர்கள்) உணர்ந்துள்ளதை வீடியோ காட்டுகிறது. அல்லது பொதுவான வணிக மொழியான ஆங்கிலம் நிச்சயம் தமிழ் பெண்ணுக்கு தெரிந்த்து இருக்கக் கூடும் என்றும் அந்த பெண் நம்பியிருக்கலாம்.
தேவைகள் இருந்தால் போதுமானது..!
இந்த புரிதல் காரணமாகவே அவர்கள் இடையேயான நட்பு அழகாய் மலர்வதை வீடியோ காட்டுகிறது. இந்த நட்பு நீடித்தாலே போதுமானது, தேவைக்கேற்ப எதிர்காலத்தில் இருவரும் தங்களது மொழிகளை மற்றவருக்கு எளிதாக கற்றுக்கொடுக்க முடியும். ஒரு பெண் கற்றுக்கொள்ளும் மொழியானது, அவரோடு நிறகாமல் அவரது குடும்பம் வரை பரவக்கூடும் என்பதை மறக்க வேண்டாம். அவ்வளவு தான், தேவைக்கேற்ப யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், எந்த மொழியையும் கற்றுக் கொள்ளலாம். கற்றுக் கொள்ள முடியும்.
நமது உள்ளூர் வரை பரவியுள்ள வட இந்தியர்களுக்கு பதில் சொல்லும் அளவிற்கு, அண்ணாச்சி கடைகளில் வேலை செய்பவர்களே இன்று இந்தியில் பேச தொடங்கிவிட்டனர். இதற்காக சிறப்பு பயிற்சி எல்லாம் அவர்கள் எடுக்கவில்லை. அந்த மொழியின் தேவை ஏற்பட்டது. அதனால் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி மொழியை கற்றுக்கொண்டனர். அதே பாணியில் நம்மூருக்கு வேலை தேடி வரும் வடநாட்டு மக்களும் தமிழ் மொழியை கற்று சகஜமாக பேச தொடங்குகின்றனர். அவர்களும் நம்மூர் பள்ளிகளில் சேர்ந்து பாடம் எல்லாம் ஒன்று பயிலவில்லை. ஆனாலும் அவர்கள் மொழியை கற்றறிந்தற்கு காரணம், சூழலுக்கு ஏற்ப தம்மை மாற்றிக்கொண்டு அதில் பிழைக்க கைதேர்ந்தவனாக இருப்பதால் தான், மனித குலம் இன்று ஒரு மாபெரும் வளர்ச்சியை கண்டுள்ளது என்பதை மறந்துவிட வேண்டாம்.