விழுப்புரம்: திமுகவின் மூத்த நிர்வாகியை துணை முதல்வராக்க வேண்டும் என கேட்கும் துணிவு ஆர்.எஸ்.பாரதிக்கு இருக்கிறதா என்றும் பாஜகவுடன் கள்ள உறவு வைத்துள்ள திமுக, ஓட்டுக்கு மட்டும் திருமாவளவன் வேண்டும், ஆனால் தபால்தலை வெளியிட பாஜக வேண்டுமா என மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள நகராட்சி திடலில் அறிஞர் அண்ணாவின் 116 வது பிறந்த நாள் விழா பொதுகூட்டம் மாநிலங்களவை உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான சிவி சண்முகம் தலைமையில் நடைபெற்றது. அப்போது பொதுக்கூட்டதில் பேசிய மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம், திமுகவின் மூத்த நிர்வாகியை துணை முதல்வராக்க வேண்டும் என கேட்கும் துணிவு ஆர்.எஸ்.பாரதிக்கு இருக்கிறதா?
நாத்திகம் பேசும் திமுகவினர் கலைஞர் சமாதியில் கோவிந்தா கோடுகிறார்கள் என்றும் ஜெயலலிதா மறைந்த பிறகு ஏன் அம்மா உணவகம் என கேட்கிறார்கள், எம்.ஜி.ஆர் இல்லை அதற்காக காலை உணவு திட்டத்தை எடுத்திட முடியுமா என்றும் பாஜகவுடன் கள்ள உறவு வைத்துள்ளது திமுக ஓட்டுக்கு மட்டும் திருமாவளவன் வேண்டும், ஆனால் தபால் தலை வெளியிட திமுகவுக்கு பாஜக வேண்டுமா என கேள்வி எழுப்பினார். பாஜகவுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என தெளிவாக சொல்லிவிட்டோம், ஆனால் டெல்லியில் திருச்சி சிவா நாடாளுமன்ற உறுப்பினர் இல்லத்தில் பாஜக தேசிய தலைவர் ஜெபி.நட்டா கலந்துக்கொண்டுள்ளார். இந்த விருந்துக்கு ஏன் காங்கிரஸ் கட்சியினர் கலந்துக்கொள்ளவில்லை.
பாஜகவுக்கும், திமுகவுக்கும் என்ன உறவு என்று உதயநிதி ஸ்டாலின் வரலாற்றை தெரிந்துக்கொள்ள வேண்டும். பணம், பதவி, அதிகாரத்திற்காக திமுக எதையும் செய்யும் என தெரிவித்தார். தமிழ்நாட்டில் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. விலையேற்றம் குறித்து எதுவும் பேசாத அமைச்சர்கள், உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகிவிடுவார் என பேசி வருகின்றனர்.நிர்வாக சீர்கேட்டை மறைக்க, கொலை, கொள்ளை, கூட்டு பாலியல் வன்கொடுமையை, சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதை மறைக்க முயல்வதாக குற்றஞ்சாட்டினார்.
விழுப்புரம் நகரத்தில் கொண்டுவரப்பட்ட ஐடி பூங்கா, மரக்காணம் பகுதியில் கொண்டுவரப்பட்ட கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், ஜெயலலிதா பல்கலைக்கழகம் ஆகிய திட்டங்களை ரத்து செய்துள்ளது திமுக அரசு எதுவும் செய்யவில்லை, அதிமுக அரசு கொண்டுவந்த திட்டங்களையும் நிறுத்தியுள்ளதாகவும்,புதிய கல்வி கொள்கையை ஏற்கமாட்டோம் என அன்பில் மகேஷ் சொல்கிறார். ஆனால் தலைமை செயலாளர் மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தில் புதிய கல்வி கொள்கையை ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளோம், நிலுவையில் உள்ள தொகையை தரவேண்டும் என எழுதப்பட்டுள்ளது. முதல்வரின் ஒப்புதல் இல்லாமல் தலைமை செயலாளர் கடிதம் எழுத முடியாது. முதல்வருக்கு தெரியாமல் கடிதம் எழுதப்பட்டிருந்தால் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.
பாஜகவுடன் உள்ள உறவால் காங்கிரஸ், விசிக இதனை கேள்வி கேட்க தொடங்கியவுடன், புதிய கல்வி கொள்கையை ஏற்கமாட்டோம் என பிரச்சினையை திசை திருப்புவதாக தெரிவித்தார். திமுக, வாக்களித்த மக்களை ஏமாற்றியுள்ளது எதைப்பற்றியும் திமுக அரசுக்கு கவலை இல்லை திமுக அரசுக்கு விரைவில் முடிவு கட்ட வேண்டும். வரும் தேர்தலில் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு மீண்டும் எடப்பாடி, பழனிச்சாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமையும் என தெரிவித்துள்ளார்.