தமிழ்நாட்டில் காவல்துறையால் ஆளுங்கட்சியான திமுகவிற்கு அடுத்தடுத்து அழுத்தங்கள் ஏற்பட்டு வருகிறது. கடந்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியில் திமுக சாத்தான்குளம் ஜெயராஜ் - பென்னிக்ஸ் ஆகியோர் காவல்துறையால் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கடும் கண்டன குரல் எழுப்பிய திமுகவிற்கு, சிவகங்கையில் நடந்த அஜித்குமார் மரண வழக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.
மயிலாடுதுறை டிஎஸ்பி புகார்:
காவல்துறையினரின் செயல்பாடுகள் பாெதுமக்களுக்கு அதிருப்தியை உண்டாக்கி வரும் நிலையில், மயிலாடுதுறை டிஎஸ்பி நேற்று அளித்த பேட்டி தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வதம், ஐஜி செந்தில்வேல் தூண்டுதலால் தனக்கு மனரீதியாக மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தாெல்லை தருவதாக நேற்று பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.
தூக்கில் தொங்க தயார்:
மேலும், நான்கு மாதம் சம்பளம் வழங்கப்படவில்லை, விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்ததாகவும், ஓய்வூதியம் பெறக்கூடாது என்பதற்காக இடைநீக்கம் செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்றும், லஞ்சம் வாங்கியதாக போலி புகார் கூறுகின்றனர் என்றும், லஞ்சம் வாங்கியது நிரூபிக்கப்பட்டால் தூக்கில் தொங்க தயார் என்று மிகவும் மன வேதனையுடன் பேட்டி அளித்தார். காவல்துறை வரலாற்றில் ஒரு காவல்துறை அதிகாரி தன்னுடைய உயர் அதிகாரிகளுக்கு எதிராக ஆதங்கத்துடன் பேட்டி அளிப்பது தமிழக வரலாற்றில் மிக மிக அரிதான ஒன்றாகும்.
இந்த விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதலமைச்சருக்கு இது பெரும் தலைவலியை உண்டாக்கி வருகிறது.
சட்டம் ஒழுங்கு:
ஏனென்றால், மயிலாடுதுறை டிஎஸ்பி சுந்தரசேன் இந்த அரசுக்கு உயர் அதிகாரிகளே களங்கத்தை ஏற்படுத்தியுள்ளனர் என்று வெளிப்படையாக குற்றம் சாட்டியுள்ளார். தொடர்ந்து காவல்துறையில் இதுபோன்று குற்றச்சம்பவங்களும், மன ரீதியான இன்னல்களும், புகார்களும் உண்டாகி வருவது பொதுமக்களுக்கு அதிருப்தியை உண்டாக்கியுள்ளது.
காவல்துறை உள்ளடங்கிய சட்டம் ஒழுங்கு துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் முழுமையான கட்டுப்பாட்டில் காவல்துறை இயங்குகிறதா? என்ற கேள்வியையும் இதுபோன்ற சம்பவங்கள் ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை டிஎஸ்பி விவகாரத்தில் அந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மறுப்பு தெரிவித்திருந்தாலும், மயிலாடுதுறை டிஎஸ்பி சுந்தரசேன் போல தமிழ்நாட்டில் பல இடங்களிலும் காவல்துறையினர் உயர் அதிகாரிகளால் குமுறிக் கொண்டு இருப்பதாகவும் காவல்துறையினர் மத்தியில் ஆதங்க குரல்களும் வெளிப்படுகிறது.
தீர்வு காண்பாரா?
தேர்தல் நெருங்கும் சமயத்தில் காவல்துறையில் நடக்கும் இதுபோன்ற புகார்களுக்கும், குற்றச்சாட்டுகளுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும் அந்த கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.