சர்ச்சை பேச்சு- திமுக, தவெகவிற்கு சிபிஐ கண்டனம்

திமுக கூட்டணியில் நீடித்து வந்த இந்திய கம்யூனிஸ்ட், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், தவெகிற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவின் சர்ச்சையான பேச்சிற்கும், முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சையும் இந்திய கம்யூனிஸ்ட் கண்டித்துள்ளது. இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடி மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர், தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், பொதுக்கூட்டம் ஒன்றில் தமிழ்நாடு அரசின் முதலமைச்சரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து தரம் தாழ்ந்த முறையில் பேசியிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

Continues below advertisement

பொது வெளியில் தரம் தாழ்ந்து பேசுவதா.?

அரசின் நடவடிக்கைகள், பிற அரசியல் கட்சிகளின் கொள்கை முடிவுகள் மீது விமர்சனங்களை முன் வைப்பதற்கும், சிலவற்றை கண்டிப்பதற்கும் கூட அனைவருக்கும் உரிமை உண்டு; அது ஆரோக்கியமான ஜனநாயக நடைமுறைகளை வலுப்படுத்தும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.இதனை தவிர்த்து, அரசியல் களத்தில் உள்ளவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை பிரச்சினைகளை பேசுவதும், அதுவும் பொது வெளியில் தரம் தாழ்ந்து பேசுவதும் சட்ட அத்துமீறலாகும். அதன் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுப்பது அரசின் கடமையாகிறது. எனினும், தற்போது சட்டமன்ற உறுப்பினர் பொறுப்பில் உள்ளவரை காவல் துறையினர் பலவந்தமாக கைது செய்யும் அளவிற்கான தீவிர நடவடிக்கையை தவிர்த்திருக்க வேண்டும்.

ஆதவ் பேச்சு ஏற்கதக்கதல்ல- பொறுப்புக்கு பெருமை சேர்க்காது

அதேபோல், தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர், கரூர் சம்பவத்தை சுட்டிக்காட்டி, அதற்கு “கணக்கு தீர்க்காமல் விடமாட்டோம்“ என்று அவரது கட்சி கூட்டத்தில் பேசியிருப்பது எவ்வகையிலும் ஏற்கத்தக்கதல்ல. அது, அவர் வகிக்கும் பொறுப்புக்கு பெருமை சேர்க்காது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். அரசியல் தளத்தில் நாகரிகத்தையும், உயர்ந்த பண்பாட்டையும் பேணிப் பாதுகாப்பதில், பொது வாழ்வில் உள்ள அனைவரும் அக்கறை காட்டுவது அவசியம் என்பதை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துவதாக வீரபாண்டியன் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

Continues below advertisement