புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளில் காரைக்கால் தொகுதியும் ஒன்று. இந்த தொகுதியில் அந்த மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தி.மு.க. சார்பில், முன்னாள் அமைச்சர் ஏ.எம்.ஹெச் நசீம் போட்டியிட்டார். அந்த மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் கடந்த 6-ஆம் தேதி நடைபெற்று முடிந்தது.


இந்த நிலையில், தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டிருந்த ஏ.எம்.ஹெச் நாஜிமுக்கு, கடந்த சில தினங்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டிருந்தது. இதையடுத்து, காரைக்கால் அரசு மருத்துவமனையில் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.


இதையடுத்து, அவர் சென்னையில் உள்ள மருத்துவமனையில் இன்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த மாநிலத்தில் நெடுங்காடு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாரிமுத்து ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.