திமுக எம்பி ஆ.ராசா பிரச்சாரத்தின்போது முதல்வர் பழனிசாமியைக் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக, அவர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். ஆ.ராசாவுக்கு எதிராக அதிமுகவினர் போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.
இந்நிலையில், தொடரும் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக ஆ.ராசா இன்று வருத்தம் தெரிவித்தார். இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், “திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் அரசியல் ஆளுமையை, குழந்தையாக உருவகப்படுத்தி பேசியிருந்தேன். இரண்டு அரசியல் தலைவர்களை அரசியல் ரீதியாக ஒப்பீடு செய்திருந்தேன். எனது பேச்சு தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. எனது பேச்சால் முதல்வர் பழனிசாமி கலங்கினார் என்ற செய்தியை கேட்டு மிகுந்த மனவேதனை அடைந்தேன். தவறாக புரிந்துகொள்ளப்பட்ட பேச்சுக்காக எனது அடிமனதின் ஆழத்தில் இருந்து வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன். எனது பேச்சால் முதல்வர் உள்ளபடியே காயப்பட்டிருந்தால் மனம் திறந்த மன்னிப்பை கோருவதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை” என்று பேசினார்.