Manickam Tagore: 2006ல் விட்டது தப்பு.. ஆட்சியில் பங்கு கேட்டு முதல்வரை சீண்டிய மாணிக்கம் தாகூர் எம்.பி.,
2026ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி, ஆட்சியில் பங்கு கேட்டு போர்க்கொடி தூக்கிய நிலையில் அது தமிழ்நாட்டிற்கு ஒத்துவராது என முதல்வர் கூறினார்.

2026ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலில் கூட்டணி ஆட்சியா, ஒரு கட்சி ஆட்சியா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் என காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர் பதிலடி கொடுத்துள்ளார்.
2026ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி, ஆட்சியில் பங்கு கேட்டு போர்க்கொடி தூக்கியுள்ளது. இதனால் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இடம் பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் தமிழகத்தின் மூத்த தலைவர்கள் பலரும் ஆட்சியில் பங்கு என்பதை திட்டவட்டமாக வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு திமுக தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்ட நிலையில் இரு கட்சியினரிடையேயும் கருத்து மோதல் நிலவி வருகிறது.
இந்த நிலையில் ஊடக நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற முதலமைச்சர் ஸ்டாலின், “ ஆட்சியில் பங்கு என்பது தமிழ்நாட்டிற்கு ஒத்து வராது” என சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக எக்ஸ் வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள விருதுநகர் காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர், “மக்கள் முடிவு செய்வார்கள் . கூட்டணி ஆட்சியா்? அல்லது ஒரு கட்சி ஆட்சியா என்பதை . 2006யில் மக்கள் தீர்பை செயல்படுத்தாதது நம் தவறு” என தெரிவித்துள்ளார்.
மக்கள் முடிவு செய்வார்கள் .
— Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப (@manickamtagore) February 11, 2026
கூட்டணி ஆட்சியா்?
அல்லது
ஒரு கட்சி ஆட்சியா என்பதை .
2006யில் மக்கள் தீர்பை செயல்படுத்தாதது நம் @INCTamilNadu தவறு.
இது அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது. கடந்த 2006ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக பெரும்பான்மை கிடைக்காத நிலையில் ஆட்சி அமைக்க அப்போது மத்தியில் இருந்த காங்கிரஸ் கட்சியும் ஒரு காரணமாக அமைந்திருந்தது. அதனை சுட்டிக்காட்டி தான் மாணிக்கம் தாகூர் பதிவு வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையை நிரூபிக்க 117 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலை உள்ளது. ஆனால் 2006 தேர்தலில் திமுக 96 தொகுதிகளில் மட்டுமே வென்றது. காங்கிரஸ் கட்சி 34 தொகுதிகளில் வென்றது. இதனால் கூட்டணி ஆட்சி அமைந்தாலும் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பங்கு கொடுக்கப்படவில்லை. 2021 தேர்தலில் இந்த கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது.
முன்னதாக ஆட்சியில் பங்கு பற்றி முதலமைச்சர் ஸ்டாலின் சொன்ன கருத்துக்கு பதிலளித்த தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வ பெருந்தகை, “முதலமைச்சர் சொன்னது அவரது கருத்து. அவரின் கட்சியின் கருத்து. தமிழ்நாட்டின் சூழல் பற்றி பேசியுள்ளார். ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கருத்து இருக்கும். எதிர்பார்ப்பும் இருக்கும். இறுதி முடிவை இரு கட்சிகளின் தலைமைகள் கூடி பேசி முடிவு செய்வார்கள்" என தெரிவித்திருந்தார்.























