மேற்குவங்க முதலமைச்சரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி, தேசிய அளவில் பாஜகவுக்கு மாற்று சக்தியாக தன்னை முன்னிறுத்தும் வகையில் காய் நகர்த்தி வருகிறார். 136 வருட பாரம்பரிய காங்கிரஸ் கட்சி தற்போது கட்சிக்குள் அதிருப்தி, தேர்தல்களில் தொடர் தோல்விகள், பாஜகவை எதிர்த்து வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இன்மை போன்றவற்றால் கட்சியை கை கழுவும் மூத்த தலைவர்கள் என தள்ளாடி வருகிறது. இதனைப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து அதற்கு தலைமை தாங்க முயற்சிக்கிறார் மம்தா பானர்ஜி. அதற்கு ஏற்றார் போல் முன்னர் பாஜகவில் இணைந்து வந்த காங்கிரஸ் கட்சியினர் தற்போது திரிணாமுல் காங்கிரசை நோக்கி படையெடுக்கின்றனர். மேகாலயாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் 12 பேர் திரிணாமுலுக்கு தாவியுள்ளனர். அசாமில் அகில இந்திய காங்கிரஸ் மகளிரணி முன்னாள் தலைவர் சுஷ்மிதா தேவியும் மம்தா கட்சியில் ஐக்கியமாகியுள்ளார். அதற்கு கை மேல் பலனாக அவருக்கு ராஜ்ய சபா உறுப்பினர் பதவியும் கிடைத்துள்ளது. இது தவிர கோவா, ஹரியானா, திரிபுரா, உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சில காங்கிரஸ் தலைவர்களும் மம்தாவுடன் இணைந்திருக்கின்றனர். எனினும் ஒரு மாநில வெற்றியோ சிறு மாநிலங்களில் பெறும் வெற்றியோ நாட்டை ஆள போதாது என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.






இது ஒரு பக்கம் இருக்க தொடர்ச்சியாக எதிர்க்கட்சி தலைவர்களையும் மம்தா சந்தித்து வருகிறார். மும்பையில், NCP தலைவர் சரத் பவாருடனான அவரது சந்திப்பு தேசிய அரசியலில் பேசு பொருளாக மாறியுள்ளது. அரசியல் தலைவர்களை மட்டுமல்லாமல், வளரும் தொழிலதிபர்களையும் தொடர்ச்சியாக சந்திக்கிறார் மம்தா. 2013- ஆம் ஆண்டில் பிரதமர் மோடி கையிலெடுத்த யுக்தி இது. மும்பையில் இப்படியான ஒரு சந்திப்பின் போது, இளம் தொழிலதிபர்களிடம், இந்தியாவின் பிரதமராக தனக்கு அனைத்து தகுதிகளும் இருப்பதாக தெரிவித்துள்ளார். 7 முறை நாடாளுமன்ற உறுப்பினர், மத்திய அமைச்சர், மிகப்பெரிய மாநிலத்தில் 3-வது முறையாக முதலமைச்சர் என்பவை அவர் சுட்டிக்காட்டும் தகுதிகளாகும். ஆனால் காங்கிரசை தவிர்த்து விட்டு மற்ற கட்சிகள் இணைந்து மத்தியில் ஆட்சியை பிடிப்பது நடைமுறைக்கு சாத்தியமற்றது என'கூறுகின்றனர் அரசியல் விமர்சகர்கள்.



வெளிநாட்டவர் நாட்டை ஆளக்கூடாது என சோனியா காந்தி மீது எழுந்த சர்ச்சையின் போது, சரத் பவார் அக்கட்சியை கைப்பற்ற நினைத்தார். அவர் கட்சிக்குள்லிருந்து அந்த முயற்சிகளை மேற்கொண்டார். தற்போது மம்தாவும் காங்கிரசை கைப்பற்ற நினைக்கிறார் ஆனால் கட்சிக்கு வெளியிலிருந்து. இதன் காரணமாகவே ராகுல் காந்தியை மிகவும் கடுமையாக சாடுகிறார் மம்தா பானர்ஜி. அரசியல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோரையும் காங்கிரசுக்கு எதிராக பேச தூண்டுகிறார். மேற்கு வங்கத்தில் மூன்றாவது முறையாக அவர் பெற்ற வெற்றியும், பவானிபூர் இடைத்தேர்தல் வெற்றியும் மம்தாவிற்கு அசூர நம்பிக்கையை அளித்துள்ளது. இதனை பயன்படுத்தி எதிர்க்கட்சிகளின் தேசிய முகமாக மாற துடிக்கிறார் மம்தா பானர்ஜி. தமிழ் நாடு, ஜார்கண்ட், மகாராஷ்டிரா மாநிலங்களில் ஆளும் கட்சிகளுடன் காங்கிரஸ் கூட்டணியில் உள்ளது. மம்தாவின் திட்டம் நிறைவேற வேண்டுமானால் இக்கட்சிகள் காங்கிரசை கை விட வேண்டும். தமிழ்நாட்டில் கூட்டணியில் இருந்தாலும் ஆட்சி கூட்டணியில் காங்கிரஸ் இல்லாததால் தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலினின் ஆதரவை பெற மம்தா குறியாக இருப்பார் என்றே தெரிகிறதுபு. மற்ற மாநிலங்களிலும் காட்சிகளை காங்கிரசில் இருந்து பிரிக்கும் வேலையை செய்வார். அதற்கு அக்கட்சிகள் தயாராக இருக்குமா என்பது மில்லியன் டாலர் கேள்வி.