Congress Alliance : 'திமுகவுடனான கூட்டணியை முறித்தது காங்கிரஸ்’ 20 வருட பந்தம் முடிந்தது..!
’தேசிய அளவில் காங்கிரஸ்க்கு மாற்றாக 3வது அணி அமைக்க மமதா பானர்ஜி, சந்திரசேகர் ராவ் முயன்றபோது அதில் இணைய மறுத்தவர் மு.க.ஸ்டாலின்’

விஜயின் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்து, 20 ஆண்டுகால திமுக கூட்டணியுடனான உறவை முறித்துக்கொண்டுள்ளது காங்கிரஸ். திமுகவுடன் தொடர்வது என்பது வெறும் தேர்தலுக்கானது மட்டுமல்ல இது கொள்கைக் கூட்டணி என்று மார்த்தட்டி பேசி வந்த காங்கிரஸ் கட்சி, தன்னுடைய நிலைப்பாட்டை அரசியல் களத்திற்கு ஏற்றவாறு தற்போது மாற்றிக்கொண்டிருக்கிறது.
தேர்தலுக்கு முன் ஒரு நிலைபாடு ; தேர்தலுக்கு பின்னர் இன்னொரு நிலைபாடு
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலிலேயே தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைக்கும் முயற்சிகள் நடைபெற்ற நிலையில், ப.சிதம்பரம், காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோரின் அழுத்தத்தால், திமுக கூட்டணியிலேயே காங்கிரஸ் தொடர்ந்தது. அதோடு, கடந்த முறை பெற்ற தொகுதி எண்ணிக்கையை விட 3 தொகுதிகள் கூடுதலாக பெற்று 28 தொகுதிகளில் போட்டியிட்டது காங்கிரஸ் கட்சி. ஆளுங்கட்சியாக திமுகவே வரும் என்று பெரிதும் எதிர்பார்த்த காங்கிரஸ் கட்சிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட கட்சியின் தளகர்த்தர்களே தோல்வியை தழுவி, ஆட்சியை இழந்தது பெரிய ஏமாற்றமாக இருந்தது.
காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிருட்டும் நடவடிக்கை
அந்த ஏமாற்றத்தில் இருந்து மீண்டும் வரும் வகையிலும், வரும் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் ஊட்டும் விதமாக தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க ஆதரவு கொடுத்ததோடு, வரும் உள்ளாட்சி தேர்தல், மக்களவை, மாநிலங்களவை தேர்தலில்களிலும் த.வெ.கவுடன் கூட்டணி என்ற அறிவிப்பையும் காங்கிரஸ் வெளியிட்டு, திமுக கூட்டணியில் இருந்து தன்னிச்சையாக வெளியேறியிருக்கிறது.
தேவையற்ற சுமையாக இருந்த காங்கிரஸ்
காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணிக்கு தேவையற்ற சுமை என்று எத்தனையோ பேர் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வலியுறுத்திய நிலையில், ராகுல்காந்தி என்ற ஒன்றை மனிதருக்காகவும் அவரை சகோதரர் போல பாவித்துவருவதாலும் காங்கிரஸ் கட்சியை திமுக கூட்டணியில் தொடர அனுமதித்திருந்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். ஆனால், ஆட்சி மாறியதும் காட்சி மாறியதுபோல, திமுக கூட்டணியை உதறிதள்ளிவிட்டு வெளியே வரும் முடிவை ராகுல்காந்தியே எடுத்திருப்பது திமுகவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
அதே நேரத்தில், காங்கிரஸ் கட்சி திமுக-வை விட்டுப்போனது நல்லதுதான் என்றும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம் எனவும் திமுகவினர் இப்போது பேசி வருகின்றனர்.
இந்தியா கூட்டணியில் தொடர்வாரா ஸ்டாலின் ?
இருப்பினும், இந்தியா கூட்டணியில் மிகப்பெரிய கட்சியாக திமுக இருந்த நிலையில், இனி அந்த கூட்டணியில் மு.க.ஸ்டாலின் தொடருவாரா? என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே, மமதா பானர்ஜி, சந்திரசேகர் ராவ் உள்ளிட்டோர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தேசிய அளவில் மூன்றாவது அணி அமைக்க முயற்சித்தனர். அப்போதும் கூட, காங்கிரஸ் கட்சி தலைமையில் இந்தியா கூட்டணியில் இணைந்து பாஜகவை எதிர்ப்பதே சரியான நிலைபாடாக இருக்கும் என்று அறிவுறுத்தி, இண்டியா கூட்டணியை வலிமையாக்கி, 3வது அணியில் இணைய மறுத்தார் மு.க.ஸ்டாலின். ஆனால், அப்படியான நிலைப்பாட்டை எடுத்து காங்கிரஸ் கட்சியை தேசிய அளவில் காப்பாற்றியவரான மு.க.ஸ்டாலினையே தூக்கி எறிந்திருக்கிறது காங்கிரஸ் கட்சி.
ட்ரெண்டிங் செய்திகள்






















