Youtuber - கள் மீது தேமுதிக டிஜிபி அலுவலகத்தில் புகார் !!
தேமுதிக தலைவர் விஜயகாந்த் , பிரேமலதா விஜயகாந்த் குறித்து அவதூறு பரப்பிய யூடியூபர்கள் மீது நடவடிக்கை கோரி டிஜிபி அலுவலகத்தில் புகார்

யூடியூபர்கள் மீது புகார்
சென்னை மயிலாப்பூரில் உள்ள தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் தேமுதிக தலைவர் மறைந்த விஜயகாந்த் மற்றும் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் மீது திட்டமிட்டு பொய்யான, அவதூறான செய்திகளை பரப்பிய யூடியூபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தேமுதிக சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
தேமுதிக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பார்த்த சாரதி சார்பில், தேமுதிக வழக்கறிஞர் அணி மாநிலச் செயலாளர் சந்தோஷ்குமார் இந்த புகாரை டிஜிபி அலுவலகத்தில் தாக்கல் செய்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சந்தோஷ்குமார் ;
மக்கள் உரிமைக்காக தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கும் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் தமிழக மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ள மறைந்த தலைவர் விஜயகாந்த் ஆகியோர் தொடங்கிய தேமுதிக கட்சியையும், அதன் தொண்டர்களையும் குறிவைத்து, உண்மைக்கு புறம்பான, அடிப்படையற்ற மற்றும் இல்லாத விஷயங்களை யூடியூப் தளங்களில் அமர்ந்து சிலர் வாய்க்கு வந்தபடி பேசி வருவதாக குற்றம் சாட்டினார்.
சவுக்கு சங்கர் உள்ளிட்டோர் மீது புகார்
இத்தகைய அவதூறான பேச்சுகள், தேமுதிக தொண்டர்களின் மனதில் பெரும் வேதனையையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளதாகவும், இதன் மூலம் மக்களிடையே பெரும் கோபம் உருவாகி வருகிறது. மேலும், தேமுதிக தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்குடன் செயல்படுகின்ற திருச்சி சூர்யா, தமிழா தமிழா பாண்டியன், சவுக்கு சங்கர் உள்ளிட்ட யூடியூபர்கள் மீதும், ஊடகங்கள் மூலம் லாபம் ஈட்டும் யூடியூப் சேனல் நிறுவனங்கள் மீதும் உடனடியாக குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக காவல் துறை தலைமை இயக்குநரிடம் வலியுறுத்தி புகார் அளிக்கப்பட்டதாக தெரிவித்தார்.























