தமிழகம் முழுவதும் இரண்டு கட்டங்களாக அதிமுக உட்கட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் முதற்கட்டமாக இன்று மற்றும் நாளையும் சேலம், கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு நடைபெற்று வருகிறது. இதில் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிளை நிர்வாகிகள், பேரூராட்சி, நகராட்சி, வார்டு கழக நிர்வாகிகள் மற்றும் வட்டக் கழக நிர்வாகிகள் ஆகியவற்றிற்கான தேர்தல் இன்று துவங்கி இரண்டு நாள்கள் நடைபெற உள்ளது.
சேலம் மாவட்டத்திற்கு புறநகர் மாவட்ட தேர்தல் பொறுப்பாளராக உடுமலை ராதாகிருஷ்ணன், முன்னாள் நடாளுமன்ற உறுப்பினர் மகேந்திரன் மற்றும் மாநகர பொறுப்பாளராக கழகத் தேர்தல் பிரிவுச் செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன், அதிமுக அமைப்புச் செயலாளர்கள் சிவசாமி, ஆகியோர் மாவட்ட பொறுப்பாளர்களிக நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் 37 ஒன்றியங்கள், 4 நகரங்கள், 33 பேரூராட்சி, 8 பகுதி ஆகியவற்றிற்கு தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று தேர்தல் நடைபெறும் மாநகர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் சூரமங்கலம், அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, கொண்டலாம்பட்டி ஆகிய நான்கு மண்டலங்களில் உட்பட்ட 60 வட்டக் கழக நிர்வாகிகளுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது. இதனை அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு செய்தார்.
சேலம் மாநகராட்சியில் ஒரு வட்டத்திற்கு 9 பதவிகள் மீதம் 540 பதவிகளுக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு வட்டத்திற்கும் மூன்று தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்பட்டு பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்து தகுதியான தகுதியான வேட்பாளர்கள் தேர்வு செய்வார்கள். இதில் ஒன்றுக்கு மேற்பட்ட தேர்வு செய்யப்பட்டவர்கள் இருந்தால் அவர்களுக்கு இடையே வாக்கு சீட்டு முறையில் தேர்தல் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, நேற்று அதிமுக உட்கட்சி தேர்தல் குறித்து சேலத்தில் அக்காட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும் சேலம் புறநகர் மாவட்ட செயலாளருமான எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார். சேலம் மாவட்டத்திற்கு என தேர்தல் நடத்தும் அலுவலர் களாக முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் மடத்துக்குளம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் தேர்தல் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் ஓமலூரில் உள்ள அதிமுக சேலம் புறநகர் மாவட்ட அலுவலகத்தில் செய்து வைக்கப்பட்டுள்ளது. போட்டியிடும் வேட்பாளர்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், வாக்கெடுப்பு முறையில் நடத்துவதற்கான வாக்குச் சீட்டுகள் மற்றும் வாக்குப்பெட்டிகள் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்கள் அனைத்தும் தயாராக உள்ள நிலையில் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் சேலம் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளருமான எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார்.