CM Vijay Cabinet: சிஎம் விஜயின் முதல் அமைச்சரவை கூட்டம் இன்று - முக்கிய முடிவுகள் என்ன? தேர்தல் வாக்குறுதிகள்?
CM Vijay Cabinet Meeting: முதமைச்சர் விஜய் தலமையிலான தமிழ்நாடு அரசின் முதல் அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற உள்ளது.

CM Vijay Cabinet Meeting: சட்ட-ஒழுங்கு, பட்ஜெட் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக, இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாம்.
முதல் அமைச்சரவைக் கூட்டம்:
சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு கடந்த 10ம் தேதி முதலமைச்சராக பொறுப்பேற்றார். அதன் பிறகு இரண்டு கட்டங்களாக அமைச்சரவை விரிவாக்கமும் நடைபெற்றது. தொடர்ந்து அனைவரும் அலுவல் கூட்டங்கள் மற்றும் ஆய்வுப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் முதமைச்சர் விஜய் தலமையிலான தமிழ்நாடு அரசின் முதல் அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இதில் முதலமைச்சர் விஜய் உட்பட தவெகவைச் சேர்ந்தவர்கள் 31 பேர், காங்கிரசை சேர்ந்த இருவர், விசிக மற்றும் ஐயுஎம்எல் கட்சியை சேர்ந்த தலா ஒருவர் என மொத்தம் 35 அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். கூட்டணி கட்சிகளுக்கும் அமைச்சரவையில் இடமளிக்கப்பட்டுள்ளதால், இன்றைய அமைச்சரவை கூட்டம் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
முக்கிய விவகாரங்கள்
அமைச்சரவை கூட்டமானது இன்று காலை சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் கூட உள்ளது. இதுதொடர்பாக அனைத்து அமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் புதிய முதலீடுகளை ஈர்ப்பது, கையெழுத்தான ஒப்பந்தங்களுக்கு ஒப்புதல் அளிப்பது, சட்ட-ஒழுங்கை நிலைநாட்டுவது, பட்ஜெட் கூட்டத்தொடர், டாஸ்மாக் விவகாரம் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தீவிரமாக பரிசீலிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுபோக புதுச்சேரியில் தேர்தல் வாக்குறுதியின் படி, மகளிருக்கு 2 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கும் திட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதேபோன்று தவெகவின் தேர்தல் வாக்குறுதியை நடைமுறைப்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பயிர் கடன் தள்ளுபடி
சட்டமன்ற தேர்தலின் போது 5 ஏக்கர் வரையிலான விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என தவெக தலைவர் விஜய் வாக்குறுதி அளித்து இருந்தார். ஆனால், முதலமைச்சராக பொறுப்பேற்ற பின், ஆர்பிஐ விதிகளை சுட்டிக்காட்சி அதிகபட்சமாக 50 ஆயிரம் வரை வாங்கியவர்களுக்கு மட்டுமே முழுக் கடன் தள்ளுபடி என அறிவித்தார். இது விவசாயிகள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் வாக்குறுதியின் படி முழு கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என அமைச்சர்கள் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், விவசாயிகளின் கோரிக்கை நிறைவேற்றப்படுமா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
பட்ஜெட்டும்.. வெள்ளை அறிக்கையும்..
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 2026-27 நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டையே முந்தைய திமுக அரசு தாக்கல் செய்து இருந்தது. தொடர்ந்து விரிவான பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டிய பணிகளை புதிய அரசு முன்னெடுத்துள்ளது. ஜுலை முதல் வாரத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் கூட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னதாக தமிழ்நாடு அரசின் நிதிநிலை தொடர்பான விவரங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிடும் பணிகள் முழு வேகத்தில் நடைபெற்று வருகின்றன. அடுத்த ஓரிரு நாட்களில் இதுதொடர்பான அறிக்கை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் அடிப்படையில் பட்ஜெட்டில் கவர்ச்சிகரமான திட்டங்கள் இடம்பெறுமா? என்பதை கணிக்க வாய்ப்புள்ளது.
Before You Go
"வாடா போலீஸ் ஸ்டேஷனுக்கு" டெலிவரி ஊழியர் ஆபாச செயல் மஃப்டி லேடி போலீஸ் அதிரடி!
ட்ரெண்டிங் செய்திகள்























