Radhan Pandit: ’’தப்புன்னா திருத்திப்போம்’’ ஜோதிடருக்கு அரசுப் பதவி- ஒரே நாளில் வாபஸ் பெற்ற தவெக அரசு!
முதலமைச்சரின் சிறப்பு அலுவலராக, தவெக ஜோதிடர் ரத்தன் பண்ட் வெற்றிவேல் நியமனம் வாபஸ்; தமிழ்நாடு அரசு அறிவிப்பு

முதல்வர் விஜயின் அரசியல் சிறப்புப் பிரிவு அதிகாரியாக, தவெக செய்தித் தொடர்பாளரும் ஜோதிடருமான ரதன் பண்ட் வெற்றிவேல் நியமனம் செய்யப்பட்டதைத் திரும்பப் பெறுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
மக்கள் மன்றத்திலும் சட்டமன்றத்திலும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து, இதுகுறித்து மறுபரிசீலனை செய்வதாக முதல்வர் விஜய் தெரிவித்திருந்த நிலையில், அரசியல் சிறப்புப் பிரிவு அதிகாரி நியமனம் 24 மணி நேரத்துக்குள் வாபஸ் பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெக
கடந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக முதல் முறையாக போட்டியிட்டு 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. எனினும் பெரும்பான்மைக்கு எண்ணிக்கை குறைவாக இருந்ததால் திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது.
கடந்த மே 10அம் தேதி தமிழ்நாட்டின் 18ஆம் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுக் கொண்டார். பதவியேற்பு மேடையிலேயே 200 யூனிட் இலவச மின்சாரம், போதைப் பொருள் தடுப்பு சிறப்பு படை, சிங்கப் பெண்கள் பாதுகாப்பு படை ஆகிய 3 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார்.
தொடர்ந்து மே 12ஆம் தேதி தமிழ்நாடு அரசு சார்பில் முதலமைச்சர் விஜயின் அரசியல் சிறப்பு பிரிவு அலுவலராக, ஜோதிடர் ரத்தன் பண்ட் வெற்றிவேல் நியமனம் செய்யப்பட்டார்.

சொந்த கட்சிக்குள்ளேயே விமர்சனம்
இந்த நியமனத்துக்கு திமுக, விசிக, கம்யூனிஸ்ட், தேமுதிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. கட்சிக்குள் நம்பிக்கை அடிப்படையில் யார் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அரசுக்குள் ஜோதிடத்தையும் ஜோதிடரையும் கொண்டு வருவது ஏன் என்று கேள்வி எழுப்பினர். தவெக தரப்பிலும் தொண்டர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இதைத் தொடர்ந்து சட்டப்பேரவையில் இதுகுறித்துப் பேசிய முதலமைச்சர் விஜய், நியமன விவகாரத்தில் மறு பரிசீலனை செய்வதாக அறிவித்து இருந்தார். தொடர்ந்து ரதன் பண்டிட் நியமனம் ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலாளர் ரீட்டா ஹரிஷ் தாக்கர் அறிவித்துள்ளார்.
ஏற்கெனவே அவர் நியமிக்கப்பட்ட 24 மணி நேரத்துக்குள், அந்த அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Before You Go
Rahul gandhi | ”காலை வாரி விடக்கூடாது! காங்கிரஸை விமர்சிக்காதீங்க” நேரடியாகவே சொன்ன ராகுல்
ட்ரெண்டிங் செய்திகள்






















