அமைச்சர்களுக்கு தடை போட்ட CM விஜய்..! 5 தொகுதிகளுக்கு ஸ்பெஷல் கவனிப்பு - தேர்தல் பணிகள் தீவிரம்
CM Vijay: தமிழ்நாடு அமைச்சர்கள் நிகழ்ச்சிகளில் பங்கேற்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை முதலமைச்சர் விஜய் விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

CM Vijay: எம்.எல்.ஏக்கள் உடனடியாக தொகுதி அலுவலகங்களை திறந்து மக்கள் பணிகளை தொடங்கவும் முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
அமைச்சர்களுக்கு முதலமைச்சர் வார்னிங்
முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் அவர் உட்பட மொத்தம் 35 பேர் உள்ளனர். அவர்களில் செங்கோட்டையனை தவிர மற்ற அனைவருமே அமைச்சரவைக்கு புதியவர்கள் தான். குறிப்பாக பல இளைஞர்களுக்கு முக்கிய துறைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. அண்மையில் நடந்த புதிய அரசின் முதல் அமைச்சரவை கூட்டத்தில், துறைரீதியாக தொலைநோக்கு திட்டங்கள் வகுக்கப்பட்டு அவற்றை செயல்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதோடு பொதுவெளியில் கவனமாகவும், பொறுப்புடன் செயல்படவும் முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தியுள்ளார். தவறு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.
அமைச்சர்களுக்கு விழுந்த தடை
இதனிடையே, அமைச்சர்களுக்கு அவர்களது சமுதாயம் சார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் பல்வேறு அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளனவாம். ஆனால், இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்று தவறுதலாக ஏதேனும் வார்த்தைகளை விட்டாலும், அது பெரும் சர்ச்சையாகி விடும் என தலைமை கருதுகிறதாம். இதனால், தற்போதைக்கு அமைச்சர்கள் யாரும் சமுதாயம் சார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க கூடாது என தடை பிறப்பிக்கப்பட்டுள்ளதாம். சட்டசபையில் பட்ஜெட் தாக்கல், மானிய கோரிக்கை விவாதம் மற்றும் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் என அடுத்தடுத்து முக்கிய நிகழ்வுகள் வரவுள்ளதால் அமைச்சர்களுக்கு இந்த தீர்க்கமான உத்தரவு பறந்துள்ளதாம். இதனை உணர்ந்து, நிகழ்ச்சிகள் தொடர்பாக தங்களுக்கு யாரேனும் அழைப்பு விடுத்தாலும் இப்போதைக்கு வேண்டாமே என அமைச்சர்கள் தவிர்த்து வருகின்றனராம்.
5 தொகுதிகளுக்கு ஸ்பெஷல் கவனிப்பு:
அமைச்சர்கள் போக தவெகவில் 77 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். அவர்களுக்கான அலுவலகங்களை மறுசீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மாவட்ட பொறுப்பு அமைச்சர்களை கொண்டு அலுவலகங்களை திறக்கவும் எம்.எல்.ஏக்கள் திட்டமிட்டு வருகின்றனர். ஆனால், அலுவல் பணிகள் காரணமாக அமைச்சர்களுக்கு நேரம் கிடைப்பதில் உள்ள சிரமத்தை உணர்ந்து, எம்.எல்.ஏக்கள் விரைந்து அலுவலகத்தை திறந்து மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டுமென முதலமைச்சர் விஜய் தரப்பில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாம். இதனிடையே, விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள திருச்சி கிழக்கு, மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம் மற்றும் அம்பாசமுத்திரம் உள்ளிட்ட 5 தொகுதிகளில் உள்ள மக்கள் பிரச்னைகளை அறிந்து, குறைகளை தீர்ப்பதில் பொறுப்பு அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனவும் முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளாராம்.
விரைவில் இடைத்தேர்தல் - தயாராகும் தவெக
காலியாக உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதால், அதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் முடுக்கிவிட்டுள்ளது. இதுதொடர்பான ஆலோசனைக்காக மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் இந்த வாரம், டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்திற்கு செல்ல உள்ளதாகவும் கூறப்படுகிறது.
சட்டசபை தேர்தல் முடிந்து, ஓராண்டுக்குள் ஐந்து தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடப்பது, தமிழ்நாட்டில் இதுவே முதல் முறை என கூறப்படுகிறது. சட்டசபையில் தங்களது பலத்தை மேலும் மேம்படுத்த இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற வேண்டியது ஆளுங்கட்சியான தவெகவிற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதனை கருத்தில் கொண்டு அதற்கான, வேட்பாளர்களை தேர்வு செய்வது தொடர்பான பணிகளையும் தவெக தரப்பு தொடங்கிவிட்டதாம்.
Before You Go
"அனாதையா நிக்கிறோம் வீட்டை இடிச்சா எங்க போவோம்" கள்ளக்குறிச்சியில் கதறி அழும் பெண்கள்
ட்ரெண்டிங் செய்திகள்























