CM Vijay Floor Test: தமிழ்நாடு சட்டப்பேரவையில் மே 13ம் தேதிக்குள் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் கெடு விதித்துள்ளார்.

Continues below advertisement

பெரும்பான்மையை நிரூபிப்பாரா முதலமைச்சர் விஜய்?

தேர்தல் முடிவில் தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்த தவெக, வேறு சில கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க உரிமை கோரியது. அதன்படி, கடந்த 10ம் தேதி விஜய் முதலமைச்சராக பதவியேற்ற நிலையில், மே 13ம் தேதிக்குள் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்டார். இதற்காக கடந்த 11ம் தேதி எம்.எல்.ஏக்களின் பதவிபிரமாணமும், நேற்று புதிய சபாநாயகருக்கான தேர்தல் நடைமுறைகளும் முடிவடைந்தது. அதன் தொடர்ச்சியாக இன்று சட்டப்பேரவையில் விஜய் தலைமையிலான புதிய அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெற உள்ளது. இதில் தமிழக வெற்றிக் கழகம் தனது பெரும்பான்மையை நிரூபிக்குமா? என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே நிலவுகிறது. இந்த ஒட்டுமொத்த நிகழ்வையும் முதல்முறையாக நேரலையில் ஒளிபரப்பு செய்யவும்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

நம்பிக்கை வாக்கெடுப்பு நடைமுறை:

இன்று காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை நடவடிக்கைகள் தொடங்கியதுமே பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் முன்மொழிவார். தொடர்ந்து சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் வாக்கெடுப்பினை நடத்துவார். அப்போது சட்டப்பேரவையின் அனைத்து கதவுகளும் மூடப்படும். மொத்தம் உள்ள 6 வரிசைகளில் பிரிவு வாரியாக வாக்கெடுப்பு நடத்தப்படும்.

வாக்கெடுப்பு நடைபெறும் போது அவையில் எத்தனை உறுப்பினர்கள் இருக்கிறார்களோ, அதில் சரி பாதியை காட்டிலும் கூடுதலாக ஒரு உறுப்பினரின் ஆதரவை பெற்றால் ஆளுங்கட்சி வெற்றி பெற்றதாக கணக்கிடப்படும். அரசியல் கட்சிககளின் ஆதரவு கடிதங்கள் மற்றும் அறிவிப்புகள் அடிப்படையில் விஜயின் ஆட்சிக்கு தற்போது பெரும்பான்மை உள்ளதால், இன்றைய நம்பிக்கை வாக்கெடுப்பில் எளிதில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி பேரவையில் பெரும்பான்மை நிரூபிக்கபட்டவுடன் அந்த தகவல் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும்.

தற்போதைய நிலையில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு பெரும்பான்மை இருக்கிறது.இன்றைய கூட்டத்தில் அதிமுக உறுப்பினர்கள் 30 பேரும், அம்மா மக்கள் முன்னேற்ற கழக உறுப்பினர் ஒருவரும் பெரும்பான்மையை நிரூபிக்க தமிழக வெற்றிக் கழக அரசுக்கு கூடுதலாக ஆதரவு தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், இன்றைய அக்னி பரிட்சையில் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் கண்டிப்பாக வெற்றி பெறுவார் என்று அரசியல் நோக்கங்கள் கருதுகிறார்கள். 

விஜய்க்கு இன்று எத்தனை எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை?

திருச்சி கிழக்கு தொகுதியை விஜய் ராஜினாமா செய்தது, திருப்பத்தூர் தொகுதி தவெக எம்.எல்.ஏ., நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்கக் கூடாதது என நீதிமன்ற உத்தரவு மற்றும் சபாநாயகர் வாக்கெடுப்பில் பங்கேற்காமாட்டார் என்பது போன்ற காரணங்களால் மொத்தம் 231 உறுப்பினர்கள் மட்டுமே இன்றைய வாக்கெடுப்பில் பங்கேற்க உள்ளனர். அதன்படி, வெறும் 117 உறுப்பினர்களின் ஆதரவை பெற்றாலே விஜய் தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபித்துவிடும். ஏற்கனவே ஆதரவு அளித்த அரசியல் கட்சிகள் மட்டுமின்றி சி.வி. சண்முகம் தலைமையிலான அதிமுகவினரும் விஜய்க்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளனர். ஆனால் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தரப்பு ஆளுங்கட்சிக்கு எதிராக இன்றைய வாக்கெடுப்பில் வாக்களிப்போம் என அறிவித்துள்ளது. இதுபோக அமமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஒற்றை எம்.எல்.ஏவான காமராஜும் தவெக ஆட்சிக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளார்.

தவெகவிற்கு 140 எம்.எல்.ஏக்கள் ஆதரவு?

விஜயின் திருச்சி கிழக்கு தொகுதி ராஜினாமா, சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் மற்றும் திருப்பத்தூர் எம்.எல்.ஏ., ஸ்ரீனிவாச சேனாபதி நீதிமன்ற வழக்கு போன்ற காரணங்களால், தவெகவின் எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 105 ஆக குறைந்துள்ளது. இதுபோக காங்கிரஸ் சார்பில் 5, விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் சார்பில் தலா 2 எம்.எல்.ஏக்கள் என மொத்தம் 13 எம்.எல்.ஏக்களின் வெளிப்படையான ஆதரவை பெற்றுள்ளார். சி.வி. சண்முகம் தலைமையில் 30 எம்.எல்.ஏக்கள் இருப்பதாகவும் அவர்கள் அனைவரும் விஜய்க்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் எனவும் கூறப்படுகிறது. ஒருவேளை அவர்கள் அனைவருமே இன்று வாக்கெடுப்பில் பங்கேற்பதை தவிர்த்தாலும், விஜய் மிகப்பெரிய அளவில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவார்.ஒட்டுமொத்தத்தில் தற்போது 140-க்கும் அதிகமான எம்.எல்.ஏக்களின் ஆதரவு விஜய் தலைமையிலான அரசுக்கு திரண்டுள்ளது.