TN Cabinet: இன்று விரிவாகிறது தமிழ்நாடு அமைச்சரவை - கைவிரித்த விசிக, IUML? சிஎம் விஜய் திடீர் முடிவு
CM Vijay TN Cabinet: இன்று விரிவாக்கம் செய்யப்படும் தமிழ்நாடு அமைச்சரவையில் விசிக மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகள் இடம்பெறாது என தகவல் வெளியாகியுள்ளது.

CM Vijay TN Cabinet: இன்று விரிவாக்கம் செய்யப்படும் தமிழ்நாடு அமைச்சரவையில், தவெக மற்றும் காங்கிரசார் மட்டுமே பொறுப்பேர்பார்கள் என கூறப்படுகிறது.
இன்று விரிவாகிறது தமிழ்நாடு அமைச்சரவை:
முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் இதுவரையில் 9 பேர் மட்டுமே அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ளனர். ஆனால் மாநில சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில், தமிழ்நாடு அமைச்சரவையில் முதலமைச்சர் உட்பட 34 பேர் இடம்பெறலாம். அந்த வகையில் இன்னும் 24 இடங்கள் காலியாக உள்ளன. அவற்றை விரைந்து நிரப்ப வேண்டும் எனவும், உரிய அமைச்சர்கள் இல்லாததால் பல்வேறு நிர்வாக பணிகள் தாமதமாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில் அமைச்சரவை விரிவாக்கம் இன்று காலை 10 மணியளவில், தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் நடைபெற உள்ளதாக அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அமைச்சரவையில் மேலும் பலர் இணைய உள்ளனர்.
கைவிரித்த விசிக, IUML?
சமூக நீதிக்கான அரசை போன்று அமைச்சரவையும் அமைய வேண்டும் இதற்காக, விசிக மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சியினரும் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என ஆதவ் அர்ஜுனா அழைப்பு விடுத்து இருந்தார். இதற்கு நன்றி தெரிவித்த திருமாவளவன், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவை அறிவிப்பதாக தெரிவித்து இருந்தார். தற்போது வரை அவரது முடிவுகள் ஏதும் வெளியாகவில்லை. இந்நிலையில் இன்றைய அமைச்சரவை விரிவாக்கத்தில் புதியதாக தமிழக வெற்றிக் கழகம் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் மட்டுமே பதவியேற்பார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. விசிக மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீகிற்கு ஒதுக்கப்பட்ட தலா ஒரு இடமானது சில நாட்களுக்குப் பிறகே நிரப்பப்படும் என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக விசிக சார்பில் இருந்து வன்னி அரசு அமைச்சரவையில் இடம்பெற அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
சிஎம் விஜய் டிக் அடித்த அமைச்சர்கள்:
இதனிடையே, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அமைச்சரவையில் இடம்பெற 10-க்கும் மேற்பட்டவர்களின் பெயரை முதலமைச்சர் விஜய் உறுதி செய்துள்ளதாக கூறப்படுகிறது. பல்வேறு சமூகங்கள் மற்றும் மாவட்டங்களை அடையாளப்படுத்தும் வகையிலும், நீண்ட காலமாக ரசிகர் மன்ற நிர்வாகிகளாக தன்னுடன் பயணித்து சட்டமன்ற உறுப்பினர் ஆனவர்களுக்கு வாய்ப்பளிக்கும் விதமாகவும் அமைச்சரவை உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனராம்.
புதிய அமைச்சர்களுக்கான உத்தேச பட்டியல்:
வெளியாகியுள்ள தகவலின்படி, நீண்டகால ரசிகர்மன்ற நிர்வாகிகளான மதுரை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரான கல்லணை, சேலம் தெற்கு தொகுதி எம்.எல்.ஏவான தமிழ் பார்த்திபன் மற்றும் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினரான மொஹமது ஃபர்வாஸ் எனப்படும் பர்வேஸ் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட உள்ளதாம். மேற்குறிப்பிட்டவர்கள் போக, தஞ்சாவூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் விஜய் சரவணன், கோவை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சம்பத் குமார் ஆகியோரும் அமைச்சர்களாக வாய்ப்புள்ளதாம்.
சென்னையில் இருந்து மட்டுமே தற்போது 5 பேர் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள நிலையில், பிராந்தியங்களுக்கான பிரதிநிதித்துவமும் பரிசீலிக்கப்பட்டு வருகிறதாம். பெண்களுக்கான வாய்ப்பை கருத்தில் கொண்டால் நிதியமைச்சர் செங்கோட்டையனின் ஆதரவு பெற்ற திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினரான சத்யபாமா பெயர் பரிசீலனையில் உள்ளதாம். இதுபோக பல்லாவரம் எம்.எல்.ஏ., காமாட்சி, எம்.எல்.ஏ., விஜயலட்சுமி ஆகியோரின் பெயர்களும் அமைச்சர் பட்டியலில் இடம்பெறலாம் என தெரிகிறது.
காங்கிரசுக்கு 2 அமைச்சர்கள்:
கூட்டணி அமைக்கும்போது காங்கிரசுக்கு 2 அமைச்சரவை பதவிகள் வழங்கப்படும் என தவெக உறுதி அளித்துள்ளது. அதன்படி, ராஜேஷ்குமார் மற்றும் விஸ்வநாத் ஆகியோர் அமைச்சரவையில் இடம்பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. உயர்கல்வித்துறை மற்றும் சுற்றுலாத்துறை ஆகிய இலாகாக்கள் காங்கிரசுக்கு ஒதுக்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ட்ரெண்டிங் செய்திகள்






















