CM Stalin: மறந்துட்டீங்களா முதல்வரே..! திமுக அரசின் அறிவிப்பால் கொதித்தெழும் மக்கள் - ஸ்டாலின் சொன்ன பொய்?
CM Stalin: தமிழ்நாடு அரசின் அறிவிப்பால் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிராக, எதிர்க்கட்சிகளும், நெட்டிசன்களும் கடுமையாக கொதித்தெழுந்துள்ளனர்.

CM Stalin: கல்விக் கடன் ரத்து என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதி என்னவாயிற்கு என்று, நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
கல்விக்கடன் ரத்து
தமிழ்நாடு அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்பில், “ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிடர் மாணாக்கர்களுக்கு 1972-1973 முதல் 2002-2003 வரையிலான காலங்களில் மருத்துவம் / மருத்துவம் சார்ந்த படிப்புகள் உட்பட அனைத்து படிப்புகளுக்கும் மற்றும் 2003-2004 முதல் 2009-2010 வரையிலான காலங்களில் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு வழங்கப்பட்ட கல்விக் கடன்களில் ரூ.48.95 கோடி நிலுவைத் தொகையினை மாணாக்கர்களிடமிருந்து வசூலிக்க இயலாததன் காரணமாகவும், வசூலிக்க சரியான பதிவேடுகள் மற்றும் விவரங்கள் ஏதும் அலுவலக ஆவணங்களில் இல்லாததாலும் மற்றும் வசூலிக்க வேண்டிய நபர்களை அடையாளம் காண இயலாததாலும் ரூ.48,95,00.000/-ஐ (ரூபாய் நாற்பத்தெட்டு கோடியே தொண்ணூற்று ஐந்து லட்சம் மட்டும்) சிறப்பினமாக கருதி முழுவதும் தள்ளுபடி (Write off proposal) செய்து அரசு ஆணையிடுகிறது” என குறிப்பிடப்பட்டு இருந்தது.
கொதிப்பை ஏற்படுத்திய அறிவிப்பு:
தமிழ்நாடு அரசின் நேற்றைய அறிவிப்பு, ஒருதரப்பினருக்கு மகிழ்ச்சிகரமானதாக இருக்கலாம். ஆனால், 2021 தேர்தலின் போது திமுக தலைவர் அளித்த வாக்குறுதிகளை நம்பி, அக்கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்து ஆட்சியில் அமரவைத்த மக்களுக்கு பெரும் ஏமாற்றமாகவே அமைந்துள்ளது. காரணம், ஏற்கனவே தேர்தல் நேரத்தில் அளித்த பல வாக்குறுதிகளை நிறைவேற்றாமலேயே, கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றிவிட்டதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு இருந்தார். ஆனால், அண்மையில் பேசும்போது, இன்னும் ஒரு சில வாக்குறுதிகள் மட்டும் நிறைவேற்றப்படாமல் இருக்கிறது, அவை விரைவில் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார். இந்த சூழலில், குறிப்பிட்ட தரப்பு மாணவர்களின் கல்விக்கடனை மட்டும் ரத்து செய்து இருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.
மறந்துட்டீங்களா ஸ்டாலின்?
கடந்த 2021-ல் நடைபெற்ற சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது 520-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்தார். அதில் தேர்தல் வாக்குறுதி எண் 159-ல், ”தமிழ் நாட்டில் உள்ள பள்ளிகளில் பயின்று, தமிழகக் கல்லூரிகளில் பட்டப் படிப்பை மேற்கொள்ள வங்கிக் கடன் பெற்ற தமிழக மாணவர்கள், ஓராண்டு காலத்துக்குள் கடனை திரும்பச் செலுத்த இயலாவிட்டால், 30 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் கல்விக் கடனை அரசே ஏற்று திருப்பிச் செலுத்தும்” என தெரிவித்து இருந்தார். ஆனால், ஆட்சி கட்டிலில் ஏறி கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் பூர்த்தியான நிலையில், தற்போது குறிப்பிட்ட தரப்பினரின் கல்விக்கடனை மட்டும் ரத்து செய்து இருப்பது நியாயமா? என்பதே பல்வேறு தரப்பினரின் கேள்வியாக உள்ளது.
நியாபகம் இருக்கா ஸ்டாலின்?
- குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் என்ற வாக்குறுதி, ஆட்சிக்கு வந்ததும் தகுதியான குடும்ப தலைவிகளாக மாற்றப்பட்டது ஏன்?
- பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்வது தொடர்பான வாக்குறுதி என்னவாயிற்று?
- பழைய ஓய்வூதிய முறை மீண்டும் அமல்படுத்தப்படும் என்ற வாக்குறுதி நிறைவேறுவது எப்போது?
- 5 ஆண்டுகளில் 50 லட்சம் வேலை வாய்ப்புகள் வழங்கப்படும். அரசுத் துறைகளில் காலியாக உள்ள 5.50 லட்சம் பணி இடங்களில் இளைஞர்களும், பெண்களும் பணியமர்த்தப்படுவார்கள் என்ற வாக்குறுதிக்கு செயல்திட்டம் வந்ததா?
- சட்டமன்றம் ஆண்டிற்கு 100 நாட்கள் நடத்தப்படும் என்ற வாக்குறுதி செயல்பாட்டிற்கு வந்ததா?
- தேர்தல் வாக்குறுதியின்படி சட்டமன்ற நடவடிக்கைகள் முழுமையாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறதா?
- மாதம் ஒருமுறை மின்கட்டணம் வசூலிப்பு
- கேஸ் சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம்
- தமிழ்நாட்டில் தொடங்கப்படும் தொழிற்சாலைகளில், 75 சதவிகித வேலைவாய்ப்பு தமிழர்களுக்கே என சட்டம் இயற்றப்படும், என்பன போன்ற தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் மறந்துவிட்டீர்களா எனவும் அரசை நோக்கி தமிழக மக்கள் ஏமாற்றத்துடனும், ஏக்கத்துடன் கேள்வி கேட்க தொடங்கியுள்ளனர்.
தேர்தல் நேரத்தில் வாக்குகளை அறுவடை செய்யும் நோக்கில் வெறும் பொய் வாக்குறுதிகளை மட்டுமே திமுக அளித்ததாக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருவதும் குறிப்பிடத்தக்கது.





















