CM Stalin On GST:  ஜிஎஸ்டி சீர்திருத்தத்தில் மாநில அரசுகளின் இழப்பை மத்திய அரசு மறைப்பதாக, முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

Continues below advertisement

மத்திய அரசு விமர்சனம்:

முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “ஜி.எஸ்.டி. வரிக்குறைப்பாலும் வருமான வரி விலக்குக்கான உச்சவரம்பை உயர்த்தியதாலும் இந்தியர்கள் 2.5 லட்சம் கோடி ரூபாயைச் சேமிக்கலாம்" என பிரதமர் கூறியுள்ளார். இதைத்தானே தொடக்கத்தில் இருந்தே எதிர்க்கட்சிகளான நாங்கள் வலியுறுத்தி வந்தோம்? 8 ஆண்டுகளுக்கு முன்பே இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால், இந்தியக் குடும்பங்கள் இன்னும் பல கோடி ரூபாயை எப்போதோ சேமித்திருக்குமே?

Continues below advertisement

”உண்மையை மறைக்கும் மத்திய அரசு”

மேலும், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வரிக்குறைப்பில் சரிபாதி அளவு மாநில அரசுகளின் பங்கிலிருந்துதான் செய்யப்படுகிறது. இந்த உண்மையை ஒன்றிய அரசு மறைப்பதாலும் பாராட்ட மறுப்பதாலும் இதனைச் சுட்டிக்காட்ட வேண்டியது எனது கடமையாகிறது. மற்றொரு புறம், ஒன்றிய பா.ஜ.க. அரசு மாநிலங்களுக்கு நியாயமாகச் சேர வேண்டிய நிதியைத் தர மறுத்து வருகிறது. இந்தித் திணிப்பை ஏற்க மறுக்கும் ஒரே காரணத்துக்காக, ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நிதி மறுக்கப்படுகிறது. இந்த அநீதி எப்போது முடிவுக்கு வரும்? தங்கள் உரிமைகளைப் பாதுகாத்து, தம் மக்களுக்காக முன்நிற்கும் மாநில அரசுகளைத் தண்டிப்பதன் வழியாக இந்தியா வளர்ச்சி பெற முடியாது. கூட்டாட்சிக் கருத்தியலுக்கு மதிப்பளியுங்கள், உரிய நிதியை விடுவியுங்கள், மக்களுக்கு நியாயமாகச் சேர வேண்டியதைத் தந்து அவர்களைப் பயனடைய விடுங்கள்” என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த பதிவுடன், ”அரசே மக்களை கடுமையாக தாக்கிவிட்டு, பின்பு அந்த நிர்வாகமே வலிக்கு மருந்து வழங்குவது போன்ற” கேலிசித்தரத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.

ஒருமித்த கருத்தில் எதிர்க்கட்சிகள்:

தமிழக அரசு மட்டுமின்றி, மேற்குவங்கம் மற்றும் கர்நாடகம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்களும், இதே கருத்தை தெரிவித்து வருகின்றனர். ஜிஎஸ்டி அமல்படுத்திய விதத்தால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் நலிவடைந்துள்ளன, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென 8 வருடங்களாக வலியுறுத்தி வந்தும் மத்திய அரசு செவிகொடுத்து கேட்கவில்லை என மம்தா பான்ர்ஜி தெரிவித்துள்ளார். ஆனால், தற்போது அமெரிக்காவின் 50 சதவிகித வரி அழுத்தம், பீகார் தேர்தல் போன்ற பல்வேறு காரணங்களை கருத்தில் கொண்டு, மத்திய அரசு தற்போது ஜிஎஸ்டி வரி விகிதத்தை குறைத்துள்ளது என எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.