நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பதவி, பொறுப்பு கிடைக்காத திமுக அதிருப்தி நிர்வாகிகளை சமாளிக்க, அவர்களுக்கு புதிய வாரியங்களை உருவாக்கி தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.


அதிருப்தியாளர்களுக்கு திருப்தி ஏற்படுத்த முடிவு


கடந்த சட்டமன்ற தேர்தலில் சீட் கிடைக்காதவர்கள், போட்டியிட்டு தோல்வி அடைந்தவர்கள், எம்.எல்.ஏ ஆகியும் அமைச்சர் பதவி கிடைக்காதவர்கள், கட்சிக்காக பல ஆண்டுகளாக உழைத்தவர்கள் என பலரும் தமிழ்நாடு அரசு வாரிய பதவியை பெற தொடக்கத்தில் இருந்து முயற்சி செய்து வந்தனர். இந்நிலையில், கட்சியில் புதிதாக இணைந்த கார்த்திகேய சிவசேனாதிபதி உள்ளிட்டோருக்கு புதிய வாரியங்களை உருவாக்கி வாரிய தலைவர் பதவியை கொடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், இப்போது அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகளை திருப்திப்படுத்த புதிய வாரியங்களை உருவாக்கவும் காலியாக உள்ள வாரிய உறுப்பினர்களை நியமிக்கவும் முடிவு எடுத்துள்ளதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


அமைச்சர் பதவிக்கு நிகரான வாரிய தலைவர் பதவி


கிட்டத்தட்ட அமைச்சர் பதவிக்கு நிகராக அரசு கார், அலுவலகம், உதவியாளர்கள் உள்ளிட்ட சகல சலுகைகளுடன் புதிதாக உருவாகப்போகும் வாரியத் தலைவர், உறுப்பினர்கள் பதவிகளை பிடிக்க இப்போதே போட்டா போட்டி தொடங்கியுள்ளது. மாவட்டங்களில் இருந்து பலர் சென்னைக்கு படையெடுத்து வந்து திமுகவின் முக்கிய தளகர்த்தர்களை சந்தித்து தங்களுக்கு வாரிய தலைவர் பதவி பெற்றுத் தர வேண்டும் என்று வலியுறுத்த தொடங்கியுள்ளனர். இதனால், தினமும் அறிவாலயம், உதயநிதியின் குறிஞ்சி இல்லம், அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் இல்லம், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இல்லம் உள்ளிட்ட பல இடங்களில் திமுகவினர் கூட்டம் அலைமோத தொடங்கியுள்ளது.


நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற வியூகம்


வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதி உள்ளிட்ட மொத்தமுள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சூளுரைத்துள்ள நிலையில், அப்படியான வெற்றியை பெற அதிருப்தியில் இருக்க கூடிய திமுக நிர்வாகிகளை சமாளிக்க வேண்டிய நிர்பந்தம் ஸ்டாலினுக்கு ஏற்பட்டிருக்கிறது. அதனால், புதிய வாரியங்கள் உருவாக்கும் முடிவை அவர் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.


விரைவில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு


விரைவில் அதற்கான அறிவிப்பு, அரசாணை வெளியிடப்படும் எனவும் அதற்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாகவும் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதேபோல, திமுகவில் மாவட்ட வாரியாக காலியாக உள்ள அணிகளுக்கான நிர்வாகிகள் பட்டியலையும் முழுமையாக நிரப்ப முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது.


புதிய பட்டியலில் இடம் பிடிக்க போட்டா போட்டி


புதிய பட்டியலில் இடம்பிடிக்க பலரும் மாவட்டங்களில் முண்டியடிப்பதால் ஒவ்வொரு மாவட்ட செயலாளர் அலுவலக வாசலிலும் ஏராளமானோர் கோரிக்கையோடு தினமும் வந்து சென்றுக்கொண்டிருக்கின்றனர். கிளை கழகம் தொடங்கி தலைமைக் கழகம் வரையிலான திமுகவிற்கு மீண்டும் ஒருமுறை புத்துயிர் ஊட்டி வரும் நாடாளுமன்ற தேர்தலில் கட்சி நிர்வாகிகளை களமிறங்கி 40 தொகுதிகளிலும் திமுகவையும் அதன் தோழமை கட்சிகளையும் வெற்றி பெற வைக்க திமுக சார்பில் எடுக்கப்பட்டு வரும் தீவிர நடவடிக்கையாகவே இது பார்க்கப்படுகிறது.