தாம்பரத்தை சேர்ந்த ஆசீக் மீரான் என்பவர் கிழக்கு தாம்பரத்தில் இயங்கிவரும் சங்கர வித்யாலயா பள்ளியில் தனது 4 வயது குழந்தைக்கு LKG வகுப்பு சேர்க்கைக்காக மனைவி, குழந்தையுடன் சென்றிருந்தனர். பள்ளியில் வளாகத்தில் விண்ணப்பம் பெறுவதற்காக அமர்ந்திருந்தபோது, பள்ளியின் அட்மின் மேலாளர் சுந்தரராமன் என்பவர், குழந்தையின் தந்தை அழைத்து, தங்கள் மனைவியை வெளியே சென்று ஹிஜாபைக் கழற்றி வைத்துவிட்டு வருமாறு கூறியதாக கூறப்படுகிறது.



 

இது தொடர்பாக பள்ளி முதல்வர் உள்ளிட்டவர்களிடம் புகார் அளித்தபோது, பள்ளியின் உள்ளே ஹிஜாப் அணிந்து யாரும் வர அனுமதியில்லை என்று முதல்வரும் கூறியதாகவும் எனவே சம்பந்தபட்ட பள்ளி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆசீக் மீரான் மற்றும் மனித நேய மக்கள் கட்சியினர், தமுமுகவினர்  என பலரும் சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகார் பெற்று கொண்ட போலீசார் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.

 

புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்ன ?

 

ஆசிக் மைதீன் அளித்துள்ள புகார் மனுவில், நான் சென்னை கிழக்கு தாம்பரம் பகுதியில் வசித்து வருகிறேன். கிழக்கு தாம்பரத்தில் உள்ள சங்கர வித்யாலயா என்ற பள்ளியில் நேற்று மதியம் சுமார் 1. 15 மணிக்கு என்னுடைய 4 வயது பெண் பிள்ளைக்கு பள்ளியில் , lkg இடம் கேட்டு சென்று இருந்தேன். அப்போது என் மனைவியும் என்னுடன் வந்திருந்தார் . பள்ளிக்கூட உள்ளறையில் சுமார் 45 நிமிடம் காத்திருந்த நிலையில், அங்கு வந்த அலுவலர் சுந்தர ராமன் என்பவர் என்னை அழைத்து, உங்கள் மனைவியின் பர்தாவை வெளியில் சென்று கழட்டி வைத்துவிட்டு உள்ளே வரவேண்டும் என்று என்னிடத்தில் தெரிவித்தார்.



இதனால் அதிர்ச்சி அடைந்த நான் என்ன காரணத்திற்காக இதுபோல் சொல்கிறீர்கள் என்று கேட்டபோது, எங்கள் பள்ளியின் தற்போதைய புதிய உத்தரவின்படிதான் நான் சொல்கிறேன். ஆகவே இங்கு வரக்கூடிய இஸ்லாமிய பெண்கள் பர்தாவை கழட்டி வைத்துவிட்டு தான் பள்ளிக்கு வரவேண்டும் என்பது புது உத்தரவு என்று சொன்னது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

 

இந்நிலையில் இது குறித்து நான் உடனடியாக பள்ளி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு கேட்கும்போது அவர்களும் இதுதான் நிலை நீங்கள் பர்தாவை கழட்டி வைத்துவிட்டு தான் உள்ளே வரவேண்டும் என்று சொன்னார்கள்.



 

ஆகவே சட்டத்திற்கு புறம்பாக சிறுபான்மை இஸ்லாமிய மக்களுடைய நம்பிக்கைக்கு எதிராகவும் மேலும் இந்திய அரசியல் அமைப்பு சிறுபான்மை மக்களுக்கு வழங்கி இருக்கக்கூடிய அடிப்படை உரிமைகளை மீறிய வகையில் இந்த செயல்பாடு அமைந்திருக்கிறது . ஆகவே இந்த சுந்தரராமன் என்ற நபர் மீது தக்க நடவடிக்கை எடுத்து, இவருக்கு ஆதரவாக இருக்கக்கூடிய இந்த  பள்ளி நிர்வாகத்தின் மீது தக்க நடவடிக்கை எடுத்து இஸ்லாமிய மக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாத்தும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை உரிமைகளை பாதுகாத்தும் தக்க நடவடிக்கை எடுக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என புகார் அளித்துள்ளார்.