தமிழ்நாடு முழுவதும் இன்று காலை தொடங்கிய வாக்குப் பதிவு, மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. இதில் மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளைப் பொறுத்தவரையிலும் 38 மாவட்டங்களிலும் சென்னையில்தான் குறைந்த அளவு வாக்குப் பதிவாகி உள்ளது. இதற்கு என்ன காரணம்?


தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் ஆகியவற்றிற்குத் தேர்தல் நடைபெற்று வருகிறது. மொத்தம் 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர், 7,621 பேரூராட்சி உறுப்பினர் பதவிகள் என மொத்தமாக 12,838 பதவிகளுக்குத் தேர்தல் நடைபெற்று வருகிறது. 


இந்த சூழலில் சென்னையில் எப்போதுமே எல்லாத் தேர்தல்களிலுமே வாக்குப் பதிவு குறைவாகவே இருந்திருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, சென்னை வாக்குப்பதிவு சராசரி 48 சதவீதமாக இருந்தது. கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில், தமிழகத்திலேயே குறைந்தபட்சமாக 59.06% பதிவாகி இருந்தன. 


சட்டப்பேரவை, நாடாளுமன்றம், உள்ளாட்சித் தேர்தல்களில் எப்போதுமே சென்னையில் வாக்குப் பதிவு குறைவாக இருக்கும் என்று கூறப்பட்டாலும், அதற்குக் காரணங்கள் என்ன என்று கேள்வி எழுந்துள்ளது. 





சென்னை மாநகர அமைப்பு


சென்னையில், 30,49,532 ஆண் வாக்காளர்களும் 31,21,951 பெண் வேட்பாளர்களும் 1,629 பிற வேட்பாளர்களும் உள்ளனர். இந்த வேட்பாளர்களின் மொத்த எண்ணிக்கை 61,73,112 ஆகும்.


சென்னையின் பூர்வ குடிகளில் பெரும்பாலானோர், வெளிநாடுகளில் பணிபுரிந்து வருகின்றனர். அதே நேரத்தில் வேலைக்காகவும் தொழிலுக்காகவும் கிராமங்களில் இருந்து வந்தவர்கள் தங்களின் சொந்த ஊருக்குச் சென்று வாக்கைச் செலுத்துகின்றனர். அதேபோல சென்னையில் வசிக்கும் அடித்தட்டு மக்களே அதிக அளவில் வாக்களிக்கின்றனர். கொரோனா தொற்று அச்சமும் வாக்குப் பதிவு அளவைக் குறைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.


சென்னையில் காலையில் வாக்குப் பதிவு தொடங்கியதில் இருந்தே மந்தமான போக்குதான் தொடங்கியது. காலை 9 மணி நிலவரப்படி 3.96% வாக்குகளும், 11 மணிக்கு 17.88% வாக்குகளும் பதிவாகின. மதியம் 1 மணிக்கு 23.42% வாக்குகளும் பிற்பகல் 3 மணிக்கு 31.89 % வாக்குகளும் பதிவாகின. மாலை 5 மணிக்கு 41.68% வாக்குகள் பதிவாகின. 




வாக்களிக்காத திரைப் பிரபலங்கள் 


ரஜினி, அஜித் குமார், தனுஷ், சிம்பு, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் சென்னையில் வாக்களிக்கவில்லை. சாமானியர்களுக்கு முன்னுதாரணமாக இருப்போரே, வாக்களிக்காதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


வெறுப்பின் உச்சத்தில் மக்கள்


சென்னை வாக்குப் பதிவு சதவீதம் குறித்துப் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், "மக்களுக்கு இந்தத் தேர்தலில் நம்பிக்கை இல்லை. வாக்குக்குக் காசு கொடுத்து எல்லோரும் ஆட்சிக்கு வந்து விடுகிறார்கள்; எதற்காக வாக்களிக்க வேண்டும் என்ற வெறுப்பின் உச்சத்தில்தான் யாரும் வாக்களிக்க வரவில்லை" என்று கூறியதையும் புறம் தள்ளிவிட முடியாது.


இதுகுறித்து வருத்தப்பட்ட மாவட்டத் தேர்தல் அதிகாரியும் சென்னை மாநகராட்சி ஆணையருமான ககன்தீப்சிங் பேடி, "நீங்கள் உங்கள் தொகுதியில் நிற்கும் வேட்பாளருக்கு வாக்களித்தால் மட்டுமே பின்னாளில் அவரிடம் அடிப்படை வசதிகள் குறித்துக் கேள்வி கேட்க முடியும். சென்னையில் வாக்குப் பதிவு  நாங்கள் எதிர்பார்த்ததை விட மிகவும் குறைவாகவே இருக்கிறது. மக்களிடம் விழிப்புணர்வு இருக்கிறது. ஆனால் சோம்பேறித்தனத்தால் சிலர் வீட்டிலேயே உட்கார்ந்து கொண்டிருக்கின்றனர்" என்று தெரிவித்தார்.


வாக்களிப்பதன் அவசியத்தையும் தேவையையும் உணர்த்தி, மாநிலத் தேர்தல் ஆணையம் தொடர்ந்து பிரச்சாரங்களை மேற்கொண்டது. எனினும் வாக்காளர் பெயர் நீக்கம் மற்றும் சேர்ப்பில் தேர்தல் ஆணையத்தின் அலட்சியமே சென்னையில் வாக்குப் பதிவு குறைந்ததற்கான முக்கியக் காரணம் என்கிறார் பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன். இதுகுறித்து ஏபிபி நாடுவிடம் பேசினார். 




''நெடுங்காலமாகவே வாக்காளர் பட்டியல் சேர்ப்பு, நீக்கம் பிரச்சினைக்குரிய ஒன்றாக இருந்து வருகிறது. அரசு தேர்தல் அதிகாரிகள் இதில் அலட்சியப் போக்கைக் கடைப்பிடித்து வருகின்றனர். ஒரு வாக்காளரின் பெயரை, குறிப்பிட்ட காரணங்களுக்காக நீக்கும்போது சம்பந்தப்பட்ட வாக்காளருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். ஆனால் நடைமுறையில் இது அமல்படுத்தப்படுவதில்லை. என்னுடைய பெயரேகூட அதேபோல் நீக்கப்பட்டது. போய்க் கேட்டால் முறையான பதில் இல்லை. இதுவரை என்னை வாக்காளர் பட்டியலில் மீண்டும் சேர்க்கவில்லை. 


அதேபோல மரணம், பெருந்தொற்று உள்ளிட்ட காரணங்களால், வாக்காளர்களின் பெயர்கள் சென்னை மாநகராட்சி தேர்தல் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை. இதனால் வாக்காளர் பட்டியலின் நேர்மைத் தன்மையில் சந்தேகம் எழுகிறது.


கொரோனா அச்சம்


அடுத்தபடியாக. பொதுமக்களிடம் என்னென்ன கொரோனா முன்னெச்சரிக்கை, தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று தேர்தல் ஆணையம் தெளிவாக விளக்கவில்லை. தனிமனித இடைவெளிக்குத் தரையில் வட்டங்கள், சானிடைசர், முக்கவசங்கள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து எதுவும் பேசப்படவில்லை. இவற்றின்மூலம் மக்கள் பாதுகாப்புடன் வாக்களிக்கலாம் என்ற நம்பிக்கையை மாநிலத் தேர்தல் ஆணையம் அளிக்கவில்லை. இதுவும் மக்கள் வாக்களிக்க முன்வராததற்கு ஒரு முக்கியக் காரணம். 


இவற்றைத் தாண்டி, நாம் மட்டும் சென்று வாக்களித்து என்ன ஆகிவிடப் போகிறது என்ற மனநிலையை மக்களிடம் பார்க்க முடிகிறது. ஆனால் இது குறிப்பிட சதவீதத்தினர் மட்டுமே. நகர்ப்புற மக்கள் அனைவரும் அதே எண்ணத்தோடு இருப்பதாகப் பொத்தாம்பொதுவாகக் கூறுவதில் உண்மையில்லை'' என்கிறார் பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன். 




எனினும் மேற்குறிப்பிட்ட காரணிகள் மற்ற பிற மாவட்டங்களுக்கும் பொருந்துமே. அங்கு எப்படி வாக்குப் பதிவு சதவீதம் அதிகமாக உள்ளது என்று கேட்டதற்கு, ''சென்னை உள்ளிட்ட மாநகரங்களுக்கும் கிராமங்களுக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. ஊரகப் பகுதிகளில் ஒருவரின் பெயர் நீக்கப்பட்டாலோ, புதிதாக ஒருவர் சேர்க்கப்பட்டாலோ அங்குள்ள மக்கள் அனைவருக்கும் உடனடியாகத் தகவல் தெரிந்துவிடும். நகர, மாநகரப் பகுதிகளில் இதற்கான சாத்தியக்கூறு கிடையாது. 


மாவட்டத் தலைமைத் தேர்தல் அதிகாரிதான் வாக்குப் பதிவு உள்ளிட்ட தேர்தல் செயல்பாடுகளுக்குப் பொறுப்பு என்னும்போது மக்கள் சார்ந்த நடவடிக்கைகளை அவர்கள் முன்னெடுத்தால்தான் மக்கள் வாக்களிக்க முன்வருவர்'' என்கிறார் ஆர்.கே.ராதாகிருஷ்ணன். 


வாக்காளர்களுடனான நெருக்கம்


கிராமப் புறங்களில் வாக்கு அளிக்கவில்லை என்றால், வேட்பாளர்களின் ஆதரவாளர்களே நேரடியாக வீட்டுக்குச் சென்று அழைத்து வரும் போக்கு உள்ளது. ஆனால் இது நகரங்களில் சாத்தியம் இல்லை. இதை இன்னொரு கோணத்திலும் அணுகலாம். உள்ளாட்சித் தேர்தல்களில் பெரும்பாலும் அக்கம்பக்கத்தினரோ, உறவினரோ போட்டியிடுவார் என்பதால், வேட்பாளருக்காகவே தேர்தல் மையத்துக்குச் சென்று ஓட்டு போடும் சூழலையும் காணலாம். ஆனால் இந்தப் போக்கு பெரும்பாலும் தனித்து வாழும் நகரங்களுக்குப் பொருந்துவதில்லை. 




சென்னை உள்ளிட்ட மாநகரங்களில் பெரும்பாலான தேவைகள் தன்னிறைவு பெற்றுவிட்டன. குறைவான மனிதத் தொடர்புகளுடனும், தொழில்நுட்ப உதவியுடனும் நகரத்தினர் வாழ்கின்றனர். ஆனால் கிராமங்களில் தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதைக் கருத்தில்கொண்டு, அங்குள்ள மக்கள் ஆர்வத்துடன் வாக்களிக்கின்றனர். 


சென்னை போலவே, கோவை, மதுரை உள்ளிட்ட மாநகரங்களிலும் வாக்குப் பதிவு குறைவாகவே உள்ளது. சட்டப்பேரவை, நாடாளுமன்றத் தேர்தல்களைக் காட்டிலும் உள்ளாட்சித் தேர்தலின்போது, நகர்ப் புறங்களில் காணப்படும் அரசியல் ஆர்வமின்மை குறைய வேண்டும் என்பதே பெரும்பாலான மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.