திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “சிசிஏ விவகாரத்தை நாடாளுமன்றத்தில் அதிமுக, பாமக ஆதரித்தது. சிஏஏவுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் அன்புமணி ராமதாஸ் வாக்களித்தார்.  அதிமுக அப்போது ஆதரித்துவிட்டு இப்போது எதிர்க்கிறது. இந்த விவகாரத்தில் மக்களை ஏமாற்றும் வகையில் அதிமுக செயல்படுகிறது. சிஏஏவுக்கு எதிராக அதிமுக வாக்களிக்காமல் இருந்திருந்தால் அது சட்டமாகியிருக்காது. திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் சிஏஏ அமல்படுத்தப்படாது” என்று பேசினார்.


மேலும், விவசாயிகள் வாழ்வாதாரத்தை அழிக்கும் வேளாண் சட்டங்களையும் அதிமுக ஆதரித்தது என்று குற்றம்சாட்டிய ஸ்டாலின், இந்த தேர்தல் ஆட்சி மாற்றத்துக்கானது அல்ல, தன்மானம், சுயமரியாதையை காப்பாற்றுவதற்கான தேர்தல் ஆகும் என்று குறிப்பிட்டார்.