தருமபுரி மாவட்ட பாஜக சார்பில் கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக மாநில துணைத் தலைவர் முன்னாள் எம்பி கே.பி.ராமலிங்கம் கலந்து கொண்டார். அப்பொழுது வருகிற ஜனவரி 2-ம் தேதி தருமபுரியில் நடைபெறும் பொதுக்கூட்டத்திற்கு வருகை தரும் மாநில தலைவர் அண்ணாமலைக்கு வரவேற்பு கொடுத்து குறித்து குழுக்கள் அமைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கே.பி.ராமலிங்கம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய ராமலிங்கம், 
வருகிற ஜனவரி 2ஆம் தேதி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தருமபுரியில் நடைபெறுகின்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று திமுக ஆட்சியின் ஊழல் குறித்து உரையாற்ற உள்ளார்.  பாரதிய ஜனதா கட்சி தற்போது வளர்ந்து வருகின்ற கட்சியாக உள்ளது.
 
தமிழகத்தில் நாளை அமைச்சரவை விரிவாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்க உள்ளார். திமுக இளைஞர் அணி செயலாளராக உள்ளவர், இளைஞர், பிரச்சாரத்தின் ஈடுபட்டு வருகிறார். திமுக இளைஞரணி செயலாளர் அமைச்சராவதை வரவேற்கிறோம். இதனை திமுகவில் உள்ள அடிமட்ட தொண்டர்கள் வரை உளமாற, இதய பூர்வமாக வரவேற்றால், பாரதிய ஜனதா கட்சியும் அதை வரவேற்கிறது. உதயநிதி ஸ்டாலின் சிறப்பாக செயல்படக்கூடியவர், அவர் அமைச்சராக வேண்டும் என்று எல்லோரும் கூறி வருகிறார்கள். அப்படி என்றால் தற்பொழுது ஸ்டாலினால் அமைக்கப்பட்டுள்ள அமைச்சரவையில் இருப்பவர்கள் யாரும் செயல்படாதவர்கள், திறமை இல்லாதவர்கள் என்று தான் அர்த்தம். உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவது என்பது,  வாழை தோட்டத்தில் ஏற்கனவே குதித்தாடுகின்ற குரங்கு கூட்டத்தில் புதிதாக ஒரு குரங்கு சேருகின்றது என்பது தான் எனது கருத்து. வாழை தோட்டத்திற்குள் குரங்குகள் ஆடுவது, பார்ப்பது நன்றாகத் தான் இருக்கும். ஆனால் வெளியே வந்த பிறகு தான் அந்த தோட்டத்தின் நிலைமை தெரிய வரும். உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவது பாஜகவுக்கு மக்களை சந்திக்க கிடைத்த ஒரு ஆயுதம் தான். இதை வைத்து தேர்தலில் வெற்றி பெறுவதற்கு ஆயுதமாக பயன்படுத்தி, மக்களிடையே திமுக ஆட்சி குறித்து எடுத்துரைப்போம்.
 
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 40 தொகுதிகளிலும் தாமரை சின்னத்தை முன்னிறுத்தி போட்டியிட உள்ளது. சட்டமன்றத் தேர்தல் வந்தாலும் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிட தற்பொழுது முயற்சித்து  வருகிறது. ஒரு வேளை கூட்டணி சேர்ந்தால் தான் திமுகவை அழிக்க முடியும் என்ற நிலை உருவானால் அப்பொழுது அதைப் பற்றி பேசுவோம் என கே.பி.ராமலிங்கம் தெரிவித்தார்.