பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா இன்று தமிழ்நாட்டுக்கு வருகை தரவுள்ள நிலையில், இந்நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 


காலூன்ற துடிக்கும் பா.ஜ.க.


தமிழ்நாட்டில் கடந்தாண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. 4 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி பா.ஜ.க.வினரிடத்தில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், தொடர்ந்து எதிர்க்கட்சிக்கு இணையாக தங்கள் இருப்பை பாஜக அரசியல் களத்தில் காட்டி வருகின்றனர். இதனிடையே 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே உள்ள நிலையில் தமிழகத்தில் கட்சியை வலுப்படுத்தும் நோக்கி பாஜக பல திட்டங்களை தீட்டியுள்ளது. 


அதன் ஒருபகுதியாக பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா இன்று தமிழ்நாடு வருகை தருகிறார். கோவை மாவட்டத்துக்கு வரும் அவர், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடக்கும் பா.ஜ.க. வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் மற்றும் பொதுக்கூட்டத்தில் ஜே.பி.நட்டா கலந்து கொள்ள உள்ளார். இதில் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் கோவை மற்றும் நீலகிரி ஆகிய 2 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு சேர்த்து நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சி மேட்டுப்பாளையம் நாலு ரோட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் நடக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தமிழகத்திற்கு வருகை தரும் தலைவர்கள்:


கடந்த ஜூலை மாதம் ஆபரேஷன் சவுத் இந்தியா என்னும் திட்டத்தை பா.ஜ.க. செயற்குழு கூட்டத்தில் பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித்ஷா அறிமுகம் செய்திருந்தார். என்னதான் பா.ஜ.க.வுக்கு வட இந்தியாவில் செல்வாக்கு இருந்தாலும் தென்னிந்தியாவில் எதிர்ப்பு இருக்கத்தான் செய்கிறது. இதனை நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு சரி செய்து, தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் பா.ஜ.க. உள்ளது. அந்த அடிப்படையிலேயே பா.ஜ.க. தலைவர்கள் தொடர்ந்து தமிழகத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர். 


இன்றைய கூட்டத்தில் ஜே.பி.நட்டா நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது பற்றியும், மத்திய அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வது பற்றியும், தேர்தல் பரப்புரைகளை எவ்வாறு செய்யலாம் என்பது பற்றியும் வாக்குச் சாவடி முகவர்களுக்கு ஆலோசனை வழங்குவார் என கூறப்படுகிறது. இன்றைய நிகழ்வில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உட்பட பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்கள் அனைவரும் கலந்து கொள்ள உள்ளார்கள்.


இதனால் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் நடந்து வருகிறது. மேலும் பா.ஜ.க. மேலிட பார்வையாளர் சுதாகர் ரெட்டி நேற்று மாலை பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாட்டு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். 


கொங்கு மண்டலத்துக்கு ஸ்கெட்ச் 


சட்டமன்ற தேர்தலில் ஆளும் திமுக கூட்டணி கோவையில் ஒரு இடங்களில் கூட வெற்றிப் பெறவில்லை. இதனால் வரும் காலத்தில் நடக்கும் தேர்தலில் கோவையை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வர தி.மு.க. முழு முயற்சி எடுத்து வருகிறது. அதேசமயம் கோவை அ.தி.மு.க.வின் கோட்டையாக திகழும் நிலையில், சமீபத்தில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் விரிசல் விழும் விதமாக கருத்து மோதல் எழுந்தது. இதற்கிடையில்  வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெறும் முனைப்போடு பா.ஜ.க. செயல்பாடு இருந்து வருகிறது. இந்நிலையில் தான் ஜே.பி. நட்டா வருகை பா.ஜ.க.வுக்கு எவ்வளவு பலமாக அமையப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. 


மேலும், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கொங்கு மண்டலத்தில் பா.ஜ.க.வின் பலத்தை அதிகரிக்கவும் முக்கிய திட்டங்களை வகுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.