பாஜகவோ, திமுகவோ.. ஃபாசிச அணுகுமுறையை யாராக இருந்தாலும் எதிர்ப்போம்: விஜய் சூளுரை!

ஃபாசிச அணுகுமுறைகளை எந்த வடிவத்தில் யார் கையிலெடுத்தாலும் அது ஒன்றிய அரசாக இருந்தாலும், மாநில அரசாக இருந்தாலும் மக்கள் பக்கம் நின்று தமிழக வெற்றிக் கழகம் எந்நாளும் தீர்க்கமாக எதிர்க்கும்- விஜய்.

Continues below advertisement

பாஜகவோ, திமுகவோ.. ஃபாசிச அணுகுமுறையை யாராக இருந்தாலும் எதிர்ப்போம் என்று தவெக தலைவர் விஜய் சூளுரைத்துள்ளார். 

Continues below advertisement

முன்னதாக, புதிய கல்விக் கொள்கையை ஏற்கும் மாநிலங்களுக்கு மட்டுமே மத்திய அரசு நிதி வழங்கும் என்று மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் திட்டவட்டமாகக் கூறி இருந்தார். இதற்கு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் உள்ளிட்ட பலர் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில், மத்திய அரசின் blackmail செய்யும் தடித்தனத்தைத் தமிழர்கள் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் கடுமையாகச் சாடி இருந்தார்.

அதேபோல, பிரதமர் மோடியை அவமதித்ததாகக் கூறி விகடன் இதழின் இணையதளம் முடக்கப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில், அதற்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் இவற்றைக் கடுமையாகச் சாடியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு:

’’மும்மொழிக் கொள்கையை வலியத் திணிப்பது, மாநிலங்களின் தன்னாட்சி உரிமையைப் பறிப்பதன்றி வேறென்ன? ஜனநாயகத்தின் நான்காவது தூணான இதழியல் துறைக்கு உரியதான பத்திரிகை சுதந்திர தர்மம் காக்கப்பட வேண்டும்.

அரசியல் சாசன உரிமையைக் கேள்விக்குறி ஆக்குவதா?

நூற்றாண்டு காணும் விகடனின் இணையத்தளப் பக்கம் முடக்கப்பட்டதற்கு ஒன்றிய அரசுதான் காரணம் என்கிற கருத்து நிலவுகிறது. பத்திரிகை, ஊடகங்களால் வெளியிடப்படும் கருத்துகள் தவறானவையாகவோ, குற்றம் சுமத்துபவையாகவோ இருந்தால் நீதிமன்றம் மூலம் தீர்வு காண வேண்டுமே தவிர, கருத்துச் சுதந்திரத்தை முடக்கும் வகையில் செயல்படுவது, அரசியல் சாசன உரிமையைக் கேள்விக்குறி ஆக்குவதன்றி வேறென்ன?

மாநில மொழிக் கொள்கைக்குச் சவால் விடுத்து, தமிழகத்திற்கு நிதி ஒதுக்கமாட்டோம் என்று பகிரங்கமாக அறிவிப்பதும், விகடன் இணையத்தளப் பக்கத்தை முடக்கியதும் ஜனநாயகத்திற்கு எதிரான, கண்டனத்திற்கு உரிய ஃபாசிச அணுகுமுறையே.

தமிழக வெற்றிக் கழகம் எந்நாளும் தீர்க்கமாக எதிர்க்கும்

ஃபாசிச அணுகுமுறைகளை எந்த வடிவத்தில் யார் கையிலெடுத்தாலும் அது ஒன்றிய அரசாக இருந்தாலும், மாநில அரசாக இருந்தாலும் மக்கள் பக்கம் நின்று தமிழக வெற்றிக் கழகம் எந்நாளும் தீர்க்கமாக எதிர்க்கும்’’.

இவ்வாறு விஜய் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement