பிரதமர் மோடி நாளை தமிழ்நாடு வரவுள்ள நிலையில், அவர் பங்கேற்க உள்ள நந்தனம் பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.


மீண்டும் மோடி சர்க்கார்:


நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழ்நாட்டில் பாஜக தீவிரமாக இயங்கி வருகிறது. கடந்த 27ஆம் தேதி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற அண்ணாமலை பாத யாத்திரையின் நிறைவு விழா கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார்.


இந்நிலையில், 6 நாட்களுக்குள், பிரதமர் மோடி மீண்டும் தமிழ்நாடு வருவது பாஜக தொண்டர்களுக்கும் மகிழச்சியையும் அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது.


சென்னை நந்தனத்தில் நடைபெறும் பொதுக்கூட்ட மேடைக்கு ‘மீண்டும் மோடி சர்க்கார்’ என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. திமுக பொதுக்கூட்டத்திற்கு நிகராக மக்களை திரட்டி பிரம்மாண்டமாக மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தை நடத்தும் பொறுப்பு பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையின் பாஜக வேட்பாளராக வினோஜ் அறிவிக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.


என்ன பேசப்போகிறார்?


ஆயிரக்கணக்கான மக்களை திரட்டி சென்னையை நாளை அதிர செய்ய வேண்டும் என முனைப்பில் பாஜக நிர்வாகிகளும் தொண்டர்களும் பொதுக்கூட்டத்திற்கு பணியாற்றி வருகின்றனர்.


நெல்லையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திமுகவை கடுமையாக விமர்சித்த பிரதமர் மோடி, சென்னையில் நடைபெறும் கூட்டத்தில் என்ன பேசப்போகிறார் என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. கடந்த முறை தமிழ்நாடு வந்தபோது தி.மு.க. அரசை விமர்சித்ததால், இந்த முறையும் அவ்வாறு பேசுவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மக்களவைத் தேர்தல் நெருங்கும் வேளையில் பிரதமர் மோடி அடிக்கடி தமிழ்நாடு வருவது குறிப்பிடத்தக்கது.