உலகப் புகழ்பெற்ற கோயிலாக திகழ்வது பழனி முருகன் கோயில். முருகப்பெருமானின் அறுபடை கோயில்களில் ஒன்றான பழனியில் அன்னதானம் வழங்க பக்தர்கள் அனுமதி வாங்க வேண்டும் என்று உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. அரசின் இந்த உத்தரவுக்கு தமிழக பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.
சேகர்பாபு ஏழரை:
இதுதொடர்பாக, அவர் திண்டுக்கல்லில் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, "முருகனுக்கு வந்த சோதனை. பழனியில் தைப்பூசத்திற்கு அன்னதானம் வழங்க அனுமதி வாங்க வேண்டும் என அறிவித்துள்ளனர். நான் கேட்கிறேன் அதற்கு தட்சணை எவ்வளவு என்று ஏன் சேகர்பாபு அறிவிக்கவில்லை. நம்மளப் பிடிச்ச ஏழரை இந்த சேகர்பாபு.
இந்த மசூதியில் இங்கதான் சந்தனம் வாங்க வேண்டும்னு பேசுவியா? ஒரு வெட்கக்கெட்ட நபர். இவர் இந்துவே இல்ல. உங்க சின்ன எஜமான் நான் கிறிஸ்தவர் என்று சொன்னபோது அல்லேலுயா கோஷம் போட்டாரோ? இந்து சமயத்தை அனுசரிக்கத் தவறிவிட்டால் இந்து சமய அறநிலையத்துறையில் இருக்க முடியாது என்று சட்டம் இருக்கிறது.
இவரிடம் இந்து சமய அறநிலையத்துறை மாட்டிக்கொண்டது. அன்னதானம் வழங்குவது ஒவ்வொரு இந்துவின் கடமை. அதற்கு எதுக்கு உன் அரசு துறையிடம் அனுமதி வாங்கனும்? ஞானசேகரன் காக்கா வலிப்பு வந்ததா நாடகம் ஆடுறான். அதை நான் சொன்னேனா? டாக்டர் சொல்லிருக்காங்க. கருணாநிதி ஆட்சியில் காவல்துறையில் ஈரல் 50 சதவீதம் அழுகிப்போச்சு.
நான் அனுமதி வாங்க மாட்டேன்:
அவரோட மகனோட ஆட்சியில 100 சதவீதம் காவல்துறை ஈரல் அழுகிப்போச்சு. அந்த சார் ஒரு சார் இல்லயாம். 4 சாராம். ஸ்டாலின் சர்க்கார் எவ்வளவு கீழ்த்தரமா, அழுகிப்போயிருக்கு. அரசுத்துறை என்றாலே அது ஆமை புகுந்த வீடு மாதிரி.
உணவுத்துறையில அனுமதி வாங்கனும்னு சொல்றீங்க. அவனுக்கு எவ்வளவு தட்சணை வாங்குறது? இதேமாதிரி மத்த மதத்துக்கு? வெட்கங்கெட்ட செயல்ல இந்த இந்து விரோத தீய சக்தி சேகர்பாபு. மத கடமையை செய்றதுக்கு நீங்க யாரு? நான் உணவு கொடுப்பேன். எந்த அனுமதியும் வாங்க மாட்டேன். எவ்வளவு பெரிய மோசடி பேர்வழி இந்த சேகர்பாபு."
இவ்வாறு அவர் பேசினார்.
எச்.ராஜாவின் இந்த பேச்சு இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தி.மு.க.வை மிக கடுமையாக விமர்சித்து வந்த எச்.ராஜா. சமீபகாலமாக பொதுவெளியில் பெரியளவு காணப்படாமல் இருந்தார். இந்த நிலையில், அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மீண்டும் எச்.ராஜா தனது காரசார பேச்சுக்களைத் தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.