ஒரே மாதத்தில் இரண்டு மூன்று முறை டெல்லிக்குச் சென்று பிரதமர் மற்றும் பாஜக தலைவர்களைச் சந்தித்துப் பேசிய ஓ.பன்னீர்செல்வத்திற்கு, பிரதமர் மோடி நேற்று தமிழ்நாட்டிற்கு வந்தபோது சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கப்படவில்லை. இதற்கு பின்னணியில் எடப்பாடி பழனிசாமி இருப்பதாகவும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து, ஓபிஎஸை ஒதுக்குவதற்கான வேலைகளில் இபிஎஸ் இறங்கியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
பாஜக கூட்டணியில் ஓபிஎஸ்
அதிமுகவில் ஒற்றைத்தலைமை பிரச்சனை எழுந்தபோது ஓபிஎஸ் அடிக்கடி டெல்லிக்குச் சென்று பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர்கள் சந்தித்து பேசி வந்தார். எடப்பாடி பழனிசாமியை விட ஓ.பன்னீர்செல்வத்திற்குத்தான் முன்னுரிமை கொடுக்கப்பட்டது. தமிழ்நாட்டிற்கு பாஜக தலைவர்கள் வந்தாலும் அவர்களை ஓ.பி.எஸ் அடிக்கடி சந்தித்து பேசி வந்தார். இதனிடையே கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது அதிமுக பாஜக கூட்டணியில் இருந்து விலகியது. ஆனால்., ஓபிஎஸ் பாஜக கூட்டணியில் நீடித்தார்.
மேலும், ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக களம் இறங்கிய அவர் பலாப்பழம் சின்னத்தில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அவர் வெற்றி பெற்றால், அதையே சாக்காக வைத்து ஓபிஎஸ் மூலம் அதிமுகவை தங்களது கூட்டணிக்கு வர வைத்து விடலாம். அதோடு அதிமுகவையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விடலாம் என்று பாஜக விரும்பியதாக சொல்லப்பட்டது. ஆனால், ஓ.பன்னீர்செல்வம் தோல்வி அடைந்ததாலும் அதிமுகவில் அவருக்கு செல்வாக்கு குறைந்ததாலும் அவரை மெல்ல மெல்லக் கழற்றிவிடத் தொடங்கியது பாஜக.
கடந்த ஏப்ரல் மாதம் தமிழ்நாட்டில் தங்களது கூட்டணியை அமித்ஷா அறிவித்தார். அப்போது ஏற்கனவே கூட்டணியில் இருந்த யாரும் அந்த நிகழ்வில் இடம்பெறவில்லை. அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் மற்றும் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் மட்டுமே இருந்தனர்.
ஓபிஎஸ்ஸை சந்திக்காத அமித் ஷா
’கூட்டணி அறிவிப்பு வெளியாகியுள்ளது, ஆனால் நீங்கள் அமித்ஷாவை சந்திக்கவில்லையே’ என்ற கேள்விக்கு நாங்கள் கூட்டணியில்தான் இருக்கிறோம் என்று சொன்னார் ஓபிஎஸ். அதிமுகவுடனான கூட்டணி அறிவிப்பிற்கு பிறகு தமிழ்நாட்டிற்கு அமித்ஷா மீண்டும் வந்தார். அப்போதும் ஓ.பன்னீர்செல்வத்தை அவர் சந்திக்கவில்லை.
இந்த நிலையில்தான் நேற்று பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்தார். முன்னதாக, அவர் திருச்சி விமான நிலையத்திற்கு வந்தபோது அவரை அதிமுக சார்பில், இபிஎஸ், வேலுமணி ஆகியோர் வரவேற்றனர். ஆனால், ஓபிஎஸ்-க்கு மட்டும் பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்கப்படவில்லை.
இச்சூழலில், மெல்ல மெல்ல ஓபிஎஸை புறக்கணித்த பாஜக இப்போது அவரை முழுமையாக புறக்கணித்துவிட்டது என்று சொல்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். இதற்கு பின்னணியில் எடப்பாடி பழனிசாமி இருப்பதாக சொல்லப்படுகிறது. தன்னுடைய பிரச்சாரத்தின்போது தனக்கு வரும் கூட்டத்தை டெல்லிக்கு எடப்பாடி ரிப்போர்ட் அனுப்பியுள்ளதாகவும் அதிமுகவில் நான் மட்டும்தான் என்பதை அவர் மீண்டும் ஒரு முறை பாஜகவிடம் சொல்லாமல் சொல்லி இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
ஓபிஎஸ், இனி என்ன செய்ய போகிறார்?
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பிரம்மாண்ட கட்சி இணைய உள்ளது என்று இபிஎஸ் அடிக்கடி கூறிவரும் நிலையில் ஓபிஎஸை கூட்டணியில் இருந்து வெளியேற்ற எடப்பாடி பழனிசாமி முடிவெடுத்துள்ளதாக சொல்கின்றனர். இதையெல்லாம் ஏற்றுக்கொண்ட பாஜகவும் ஓ.பன்னீர் செல்வத்தைக் கழற்றிவிட முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் ஓபிஎஸ், இனி என்ன செய்ய போகிறார் என்று அவரது ஆதரவாளர்கள் புலம்பி வருகின்றனர் .