Bihar Assembly Election 2025: பீகார் சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு என்.டி.ஏ கூட்டணி தொகுதி பங்கீட்டை அறிவித்த நிலையில் மகா கூட்டணி இன்று அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது. யாருக்கு எத்தனை தொகுதி என்பது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
சூடுபிடிக்கும் பீகார் தேர்தல்:
பீகாரில் சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில் , வரும் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகள் இரண்டு கட்டமாக பீகார் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 243 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட பீகாரில் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நவம்பர் 14 அன்று வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
பீகாரில் தற்போது ஜனதா தளம் (ஐக்கிய) கட்சியின் தலைவர் நிதிஷ்குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியே ஆட்சி அமைக்க வேண்டும் என்ற நோக்கில் தீவிரம் காட்டி வருகிறது. மறுபுறம் எப்படியும் இந்த முறை ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து விட வேண்டும் முனைப்பு காட்டி வருகிறது ஆர்ஜேடியின் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான கூட்டணி. இச்சூழலில் என்.டி.ஏ கூட்டணி தொகுதி பங்கீட்டை நேற்று அறிவித்த்து.
இதில், பாஜக மற்றும் ஜேடியூ தலா 101 ஒரு தொகுதிகளிலும் சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி (LJP) (R) (ராம்விலாஸ் பாஸ்வான்) 29 தொகுதிகளிலும், உபேந்திரா குஷ்வேகா தலைமையிலான ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா மற்றும் ஜிதன் ராம் மாஞ்சி தலைமையிலான ஹிந்துஸ்தானி அவாமி மோர்ச்சா தலா 6 தொகுதிகளில் போட்டியிடும் என்றும் அறிவிக்கப்பட்டது.
காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதி?
இச்சூழலில் தான் இன்று மகா கூட்டணி தொகுதி பாங்கீட்டை அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது. லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) காங்கிரஸ் மற்றும் முகேஷ் சஹானியின் விகாஷீல் இன்சான் கட்சி (விஐபி) , இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) விடுதலை போன்ற கட்சிகளின் கூட்டணி தான் மகா கூட்டணி. இதில் காங்கிரஸ் கட்சிக்கு 60 இடங்கள் ஒதுக்கப்படாலாம் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் சிபிஐ (எம்எல்) 30 இடங்களும் விகாஷீல் இன்சான் கட்சி 20 இடங்களும் இதர கட்சிகளுக்கு 4 தொகுதிகளும் மீத முள்ள 129 தொகுதிகளில் ராஷ்ட்ரிய ஜனதா தளத்திற்கு ஒதுக்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது.