பெரும் சட்டப் போராட்டத்திற்கு பிறகு, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்து இடைக்கால பிணையில் வெளியே வந்து தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். டெல்லியில் உள்ள பாஜகவின் தலைமை அலுவலகத்தில் ஆம் ஆத்மி சார்பில் இன்று போராட்டம் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.


"ஆம் ஆத்மி கட்சியை அழிக்க ஆபரேஷன் ஜாது"


போராட்டத்திற்கு முன்னதாக தொண்டர்களுக்கு மத்தியில் பேசிய கெஜ்ரிவால், "ஆம் ஆத்மி கட்சியை அழிக்க ஆபரேஷன் ஜாதுவை (ஆம் ஆத்மி கட்சியின் சின்னம்) பாஜக தொடங்கியுள்ளது" என்றார். தொடர்ந்து பேசிய அவர், "நமக்கு முன்னால் பெரிய சவால்கள் இருக்கின்றன. அவற்றை எதிர்கொள்ள தொண்டர்கள் தயாராக இருக்க வேண்டும்.


ஆம் ஆத்மியின் தலைவர்களை கைது செய்து, கட்சியின் வங்கிக் கணக்குகளை முடக்கி, கட்சி அலுவலகத்தை காலி செய்ய வைப்பதன் மூலம் ஆம் ஆத்மியை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியாக ‘ஆபரேஷன் ஜாது’-வை பாஜக திட்டமிட்டுள்ளது.


பலத்த போலீஸ் பாதுகாப்பு இருந்தபோதிலும், அனைத்து எம்எல்ஏக்களுடன் பாஜக தலைமையகத்திற்கு அணிவகுத்து செல்வோம். எங்களை கைது செய்யும் வரை அங்கேயே அரை மணி நேரம் காத்திருப்போம். ஆம் ஆத்மி கட்சியின் எழுச்சி குறித்து பிரதமர் நரேந்திர மோடி கவலை அடைந்துள்ளார்.


"சத்தியத்தின் பாதையில் செல்லுங்கள்"


கட்சி மிக வேகமாக வளர்ந்துள்ளது. கட்சியை நசுக்க, 'ஆபரேஷன் ஜாது' (ஆம் ஆத்மி கட்சியின் சின்னம்) துவக்கி உள்ளனர். இனிவரும் காலங்களில் எங்களது வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு, எங்கள் அலுவலகமும் பறிக்கப்படும் என்பதால், நாங்கள் சாலையில் கொண்டு வரப்படுவோம்.


முன்னால் பெரிய சவால்கள் இருக்கும். தயவுசெய்து அவர்களை எதிர்கொள்ள தயாராக இருங்கள். கடந்த காலத்தில் நாம் பல சவால்களை எதிர்கொண்டோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஹனுமான் மற்றும் கடவுளின் ஆசீர்வாதம் எங்களுக்கு உள்ளது. இதிலிருந்து நாம் பிழைத்திருக்க மாட்டோம். சத்தியத்தின் பாதையில் செல்லுங்கள். சமுதாயத்திற்காக உழைக்க விரும்புகிறோம்" என்றார்.


இதற்கிடையில், ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர் ஸ்வாதி மலிவால் தாக்கப்பட்ட வழக்கு தொடர்பாக, டெல்லியின் கூடுதல் டிசிபி அஞ்சிதா செப்யாலா உள்ளிட்டோர் டெல்லி முதலமைச்சர் இல்லத்துக்கு சென்றனர். கடந்த மே 13 ஆம் தேதி, முதலமைச்சரை சந்திக்க அவரது இல்லத்திற்குச் சென்றபோது தன்னை கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் தாக்கியதாக மாலிவால் புகார் அளித்திருந்தார்.


இந்த வழக்கு தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. மாலிவால் ஊழல் வழக்கை எதிர்கொள்வதால், தனக்கு எதிரான சதி திட்டத்தின் ஒரு பகுதியாக மாற்ற பாஜகவால் பிளாக்மெயில் செய்யப்பட்டதாக கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார். இந்த வழக்கு தொடர்பாக பிபவ் குமாரை டெல்லி போலீஸார் நேற்று கைது செய்தனர்.